ஆசிய திரைப்பட விருது விழாவில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் ’பொன்னியின் செல்வன் பாகம் 1’’ திரைப்படம்  ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது.




ஹாங்காங் நகரில் 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. பொன்னியன் செல்வன் பாகம்-1  சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் லைகா புரொடக்‌ஷன்ஸின் ஜி.கே.எம். தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த்  ரவிவர்மன், ஸ்ரீகர் பிரசார் ஆகியோர் ஹாங்காங் சென்றுள்ளனர்.




கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


Variety என்ற இணையதளத்திற்கு ஆனந்த் அளித்து பேட்டியில், ஆசிய விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது பெருமையளிப்பதாக தெரிவித்துள்ளார்.ஏனெனில், ஆயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாவல் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதற்கு உலக அளவில் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது கற்பனையான கதை என்றாலும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிப்பலிப்ப்தாக இருக்கிறது. 


படம் உருவாக்கம் குறித்து பேசுகையில், எல்லாருக்கும் இது சவாலான ஒன்றாக இருந்தது என்று தெரிவித்திருந்தார்.


பொன்னியின் செல்வன் -2 


பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கோடை விடுமுறையில் ஏப்ரல் 28- ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இச்சூழலில் பட ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில்,  அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


ரசிகர்களின் காத்திருப்பிற்கேற்ப, திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  2023 சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகும் என சென்ற ஆண்டே மணிரத்னம் அறிவித்ததுடன் முழு ஷூட்டிங்கையும் ஏற்கெனவே ஒரேடியாக முடித்து விட்டார். இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பொன்னியின் செல்வன் -1 


லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ்  இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவான திரைப்படம். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகி உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கல்கியின் ப்ரியர்களும் இந்தப் படத்தை கொண்டாடினர். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, ஜெயராம் என மிக பெரிய திரை பட்டாளமே ஒன்று திரண்டு நடித்த இப்படத்தின் மெய் மயக்கும் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். பாடல்கள் ஹிட், காட்சிகளும் சிறப்பாக அமைந்துவிட்டன. 450 கோடிகளுக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து தமிழ் சினிமாவின் பெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.