திருவாரூர் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 12 மணி நேரத்தில் ஐந்து பேரை கைது செய்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 34. இவர் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள் உள்ளிட்ட நான்கு பேருடன் நேற்று அவர் வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிந்து தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஸ்கார்பியோ கார் ராஜ்குமார் பயணித்த காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் காரில் உள்ளவர்கள் டோர் லாக் ஆனதால் இறங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ராஜ்குமார் மட்டும் இறங்கிய நிலையில் ஸ்கார்பியோ காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து தப்பிக்க முயன்ற ராஜ்குமாரின் தலை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியினை தீவிரப்படுத்தினார். இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் பாரதி வயது 32 வீரபாண்டியன் வயது 29 சூர்யா வயது 21 அரசு வயது 20 மாதவன் வயது 21 ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன் ராஜேஷ் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் கடந்த 11.10.2021 அன்று நீடாமங்கலம் கடை தெருவில் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வனின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த படுகொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் பாரதி என்பவர் நடேச தமிழார்வனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வளரும் தமிழகம் கட்சியினர் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட பூவனூர் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த போராட்டத்தின் காரணமாக திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் அனைத்து வாகனங்களையும் திருவாரூர் மன்னார்குடி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்