லிப்ரா புரொடக்‌ஷன் என்ற நிறுவனத்தின் கீழ் ஏராளமான திரைப்படங்களை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் ‘ஃபேட் மேன்’ எனும் அடைமொழியுடன் வலம் வரும் ரவீந்தர் சந்திரசேகர். நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட  திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.


வீடியோ ஜாக்கியாக இருந்து ஏராளமான சீரியல்களில் வில்லியாக நடித்து கவனம் பெற்ற நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருப்பதியில் திடீர் திருமணம் செய்து கொண்டு சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தனர். 


 



லவ் பேர்ட்ஸ் :


பெரும் சர்ச்சையில் நடைபெற்ற இவர்களின் திருமணம் குறித்து ஏராளமான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் செய்யப்பட்டாலும் அது எதை பற்றி துளியும் கவலையும் லவ் பேர்ட்ஸ் போல சுற்றி திரிந்தனர். பல யூடியூப் சேனல்களுக்கு ஜோடியாக பேட்டி அளித்தனர். மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்த இந்த காதல் ஜோடி வாழ்க்கையில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டது. 


பண மோசடி வழக்கு :


சென்னையை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தை நடத்தி வரும் பாலாஜி கபா என்பவரிடம்  திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக அளவிலான லாபத்தை பார்க்கலாம் என ரவீந்தர் ஆசைவார்த்தை காட்டி அவரிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சொல்லி சென்னை கமிஷனர் ஆபீசில் புகார் அளித்து இருந்தார் பாலாஜி கபா. 


ரவீந்தர் கைது :


போலீசில் வழக்கு விசாரணையில் ரவீந்தர் போலி ஆவணங்களை தயார் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து கடந்த 7ம் தேதி அன்று ரவீந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் கணவரை ஜாமீனில் எடுப்பதற்காக மனைவி மகாலக்ஷ்மி முன்னதாக எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் தனது கணவர் ரவீந்தருக்கு ஏ கிளாஸ் வசதிகள் சிறையில் வழங்கப்பட வேண்டும் என்ற மனுவையும் தாக்கல் செய்திருந்தார். 


மகாலக்ஷ்மியின் இரண்டு மனு தாக்கல் :


மகாலக்ஷ்மி தாக்கல் செய்து இருந்த ரவீந்தரின் ஜாமீன் மனு மற்றும் ஏ கிளாஸ் வசதித்திக்கான மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார் எழும்பூர் நீதிமன்றத்தின் குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ரேவதி. ஜாமீனில் ரவீந்தர் வெளியில் அனுப்பப்பட்டால் வழக்கு சார்ந்த சாட்சிகளை அவர் அழிக்க வாய்ப்புகள் இருக்கும் என்ற போலீசாரின் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ரவீந்தரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரவீந்தருக்கு ஏ கிளாஸ் வசதிகளுக்கான மகாலக்ஷ்மியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.