சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பஞ்ச தந்திரம் படம் ரிலீசான காலக்கட்டத்தில் தோல்விப்படமாக அமைந்தது. அதனைப் பற்றி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

பஞ்சதந்திரம் படம்

2002 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த படம் பஞ்ச தந்திரம். இப்படத்தில் சிம்ரன் ஹீரோயினாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், தேவயானி, ஊர்வசி, ஐஸ்வர்யா, சங்கவி, வித்யா வெங்கடேஷ், யூகி சேது, நாகேஷ், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா, விஜயகுமார், சந்தான பாரதி, கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தேவா இசையமைத்த இப்படம் பிளாக் காமெடி வகையறாவைச் சேர்ந்தது. தமிழின் மிகச்சிறந்த காமெடி படங்களில் இதுவும் ஒன்று என இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 

கமல் படத்தால் வந்த நஷ்டம்

இந்த நிலையில் பஞ்ச தந்திரம் படத்தை தயாரித்த பி.எல்.தேனப்பன் நேர்காணல் ஒன்றில் அப்படம் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறினார். அதில், “நான் தயாரித்த படங்களில் மன நிறைவை தந்த படங்களில் பண விஷயத்தில் கமல்ஹாசன் மூலமாக வந்த “காதலா காதலா” படத்தை சொல்லலாம். ஆனால் தேவையில்லாமல் பெற்ற படம் என்றால் அது பம்மல் கே. சம்பந்தம் தான். அந்த படத்தை முதலில் மீடியா ட்ரீம் என்ற கம்பெனி தயாரிப்பதாக இருந்தது. அவர்கள் தான் ஷங்கர் இயக்க கமல் நடிக்க எந்திரன் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அதற்கான சூழல் இல்லாத காரணத்தால் சின்ன படம் இயக்கலாம் என கூறி, பம்மல் கே.சம்பந்தம் செய்தார்கள்.

Continues below advertisement

ஆனால் ஷூட்டிங் தொடங்கிய 10வது நாளே தயாரிப்பு தரப்புக்கும், படக்குழுவுக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டு விட்டது. படத்தை ட்ராப் பண்ணிடலாம் என கமல் முடிவு செய்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க சொன்னார். ஆனால் நான் கமல்ஹாசன் படம் நிற்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அதை முதல் காப்பி அடிப்படையில் வாங்கி அப்படத்தை ரிலீஸ் செய்தேன். அப்படத்தை ரூ.17 கோடி அளவிற்கு பிசினஸ் செய்தேன். 

ஆனால் இந்த படத்தால் பஞ்ச தந்திரம் படம் ரிலீஸ் செய்யும்போது சிக்கல் ஏற்பட்டது. பஞ்ச தந்திரம் படத்தால் மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. பஞ்ச தந்திரம் நல்ல படம் தான். ஆனால் அன்றைக்கு இருந்த மக்கள் இவ்வளவு வேகம் இல்லை. இன்றைக்கு அந்த படத்தை யார் பார்த்தாலும் சூப்பர் படம் என சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கு யாருக்கும் அது புரியவே இல்லை. தொடர்ச்சியாக காமெடியாக வந்ததால் மக்களுக்கு எளிதில் புரியவில்லை. இன்றைக்கு பாமர மக்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை சூப்பர் என கூறுகிறார்கள்” என தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறியுள்ளார்.