நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள " மாநாடு" படத்திற்கான எதிர்பார்ப்பு அவரது ரகிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. சிம்புவின்  நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை . இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் மாநாடு படம் நிச்சயம் சிம்புவிற்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.


மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்கிறார். படத்தில் "அப்துல் மாலிக்" என்ற கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க அரசியல் களம் கொண்டு பயணிக்க இருக்கிறது.




படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.  "மாநாடு" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதுவும் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






இந்நிலையில் நேற்று படம் குறித்த தகவல் ஒன்றினை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்  காமாட்சி  வெளியிட்டுள்ளார். அதில்  "நானும் சிம்புவும் மாநாடு படத்தை பார்த்தோம், அது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. வெங்கட் பிரபுவின் கடின உழைப்பு  அபாரமாக தெரிகிறது. மங்காத்தா இயக்குநர் தனது த்ரில்லிங் ஆக்ஷனோடு திரும்ப வந்துவிட்டார், அவருக்கு என் நன்றிகள்" என தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு  தரமாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளார். படத்தின் கதாநாயகி தனது அழகால் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார் என குறிப்பிட்ட அவர் ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.




தற்போது தயாரிப்பாளர் மூலம் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு சிம்பு  ரசிகர்கள் மத்தியில்  குஷியை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. கொரோனா சூழலில் படம் ஓ.டி.டி தளங்களில் வெளியாகுமா அல்லது திரையரங்குகள் திறக்கப்படும் வரை காத்திருக்குமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.