“விக்ரம் நடித்த 'கந்தசாமி' படம் மலைக்கள்ளன் மாதிரி வரவேண்டியது. அந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் இதுதான்” என நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். 


கடந்த 2009ஆம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான படம் ‘கந்தசாமி’. சுசிகணேசன் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரேயா, ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, கிருஷ்ணா, வடிவேலு எனப் பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. பல கோடி செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் கந்தசாமி படம் வரவேற்பை பெறாமல் போனது. இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் விக்ரம் பாடியிருந்தார். 


ஏன் கந்தசாமி படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதை நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் தாணு சொல்லியிருந்தார்.  அதாவது, “கந்தசாமி படம் மிஸ்ஸாகவில்லை. அது ஜெயிக்க தான் செய்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் 10 நிமிடம் இருந்தது. நான் சுசிகணேசனிடம், “படம் பார்க்க வர்றவங்க வீட்டுல இருந்து வர, படம் முடிச்சி போக என ஒரு மணி நேரம், இண்டர்வெலுக்கு 15 நிமிடம், இதைத்தவிர படத்தின் நேரம் எல்லாம் பார்த்தால் சுமார் 5 மணி நேரம் செலவிட வேண்டியதாக உள்ளது. படம் பார்க்க வருகிறவர்களை சீட்டில் உட்கார வைக்க வேண்டுமே தவிர, எந்த இடத்திலும் நேரமாகி விட்டது என நினைக்க கூடாது. அதனால் படத்தில் அரைமணி நேர காட்சியை கூட நீக்கி விடு. நீ இரண்டு மணி நேரம் 30 நிமிடம் வரும்படி படத்தை வைத்தால் போதும்” என சொன்னேன். 


அதற்கு சுசிகணேசன் என்னிடம், “இல்லண்ணே.. லகான் படம் எல்லாம் 3 மணி நேரம் போச்சு. நீங்க பண்ணி கொடுங்க” எனக் கூறினார். இதனையடுத்து நான், “கந்தசாமி படம் நீளமாக இருக்கிறது என கருத்து வந்தால் படத்துக்கான மதிப்பு குறையும்.  மலைக்கள்ளன் மாதிரி வரவேண்டிய படத்தை உனக்காக விட்டுக் கொடுக்கிறேன். இதன் முடிவு எப்படி இருக்கும் என்றால் ஹீரோவை தேடி தயாரிப்பாளர்களும், தயாரிப்பாளரை தேடி ஹீரோக்களும் வருவார்கள். ஆனால் உன்னைத் தேடி வருபவர்கள் எண்ணிக்கை குறையும்” எனக் கூறினேன்.


அதேசமயம் விக்ரமின் கேரியரில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் கந்தசாமி. ட்ரெய்லருக்கு மட்டும் ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டது. கந்தசாமி பட ட்ரெய்லர் வட இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்தது. படத்துக்கு என்ன வியாபாரம் நடந்ததோ அது அப்படியே செலவாச்சு” என்று அந்தப் பேட்டியில் தாணு தெரிவித்திருந்தார்.