தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன். தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வருவார். இந்த சூழலில், இன்று கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

போலீசார் விசாரணை:

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. குடும்பத் தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்:

தயாரிப்பாளர் கே.ராஜன் 1941ம் ஆண்டு பிப்வரி 25ம் தேதி பிறந்தவர். இவர் 1983ம் ஆண்டு வெளியான பிரம்மச்சாரிகள் என்ற படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர், 2000ம் ஆண்டு டபுள்ஸ், அவள் பாவம் ஆகிய படங்களையும், 2001ம் ஆண்டு நினைக்காத நாளில்லை என்ற படத்தையும் தயாரித்தார்.

Continues below advertisement

தயாரிப்பாளராக மட்டுமின்றி நம்ம ஊரு மாரியம்மா என்ற படத்தை 1991ம் ஆண்டும், உணர்ச்சிகள் என்ற படத்தை 2005ம் ஆண்டும் இயக்கியிருந்தார்.  1991ம் ஆண்டு வெளியான தங்கமான தங்கச்சி என்ற படத்திற்கும், 1992ம் ஆண்டு சின்ன பூவை கிள்ளாதே என்ற படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

தயாரிப்பாளராக மட்டுமின்றி நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் ராஜ் என்ற படத்தில் 1987ம் ஆண்டு நடிகராக அறிமுகமான இவர் வீட்டோட மாப்பிள்ளை, நடிகை, கிரிவலம், துணிவு என சுமார் 25 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக பகாசூரன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

திரையுலகினர் அதிர்ச்சி:

சிறு, குறு திரைப்படங்களுக்காக அவர் யூடியூப் தொலைக்காட்சியில் ஏராளமான பேட்டி அளித்துள்ளார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த சூழலில், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நாளை அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சர் விஜய் திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், உயிரிழந்த கே.ராஜன் திரைப்பட விநியோகஸ்த சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தவர் என்பதாலும் அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

">