சில நடிகைகளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை தவறான வழிகளுக்கு செல்கிறார்கள். தப்பு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா பேசிய நேர்காணல் ஒன்று அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் உண்டாக்கியது. தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா தொடங்கி ஷாரூக்கான் வரை அனைவரையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சைக்குரிய பல குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “சினிமாவில் சில தவறுகள் நடக்கிறதா என கேட்டால் நடக்கத்தான் செய்கிறது. இதை ஒப்புக்கொண்டு தான் செய்கிறார்கள். சினிமாவுக்குள் வரும் சில சகோதரிகள் சில தவறுகளுக்கு உட்பட்டு தான் செய்கிறார்கள். மறைமுகமாக நடக்கிறது. இதனை சுசித்ரா வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே ஒரு சகோதரர் (பயில்வான் ரங்கநாதன்) நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுகிறார் என கூறி நான் கமிஷனர் ஆபீஸில் புகாரளித்தேன்.
தவறை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் செய்கிறார்கள். இதனை மறுக்கவே முடியாது. அங்கங்க நடப்பதை ஏன் வெளிப்படுத்த வேண்டும். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் சுசித்ரா இப்போது ஏன் சொல்கிறார். மீடியாவில் தன்னுடைய பெயர் வர வேண்டும் என நினைக்கிறாரோ என தெரியவில்லை. இதை நான் வரவேற்கவில்லை.
ஷாருக்கான் வரை சுசித்ரா பேசுகிறார் என்றால் எந்தளவுக்கு அந்தம்மா இருப்பார் என பாருங்கள். ரொம்ப சங்கடமா இருக்கு. பாடகி சின்மயி திடீரென வைரமுத்து பற்றி பேசுகிறார். அவர் சொல்லும் குற்றச்சாட்டு இன்று, நேற்று நடந்தது இல்லை. 15 வருடங்களுக்கு முன்னால் நடந்தது என சின்மயி கூறுகிறார். ஆனால் அவருடைய கல்யாணத்துக்கு வைரமுத்து வருகை தந்துள்ளார். சின்மயி குற்றம் நடந்தபோதே புகார் கொடுத்திருக்கலாம்.
சட்டங்களும் அரசு கடுமையாக பெண்கள் பாதுகாப்புக்கு என கொண்டு வந்துள்ளது. என்னுடைய கேள்வி என்னவென்றால் 5 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இப்போது ஏன் சொல்ல வேண்டும். ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காவல்துறையில் தாராளமாக புகார் அளிக்கலாம். ஆனால் பொதுவெளியில் போட்டுடைக்க என்ன காரணம் தான் என தெரியவில்லை. சில பெண்கள் அளிக்கும் தவறான தகவலால் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் உங்களுக்கு பாதிப்பு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக சினிமா உலகமும் உதவுகிறது. நான் அன்னைக்கு பயில்வான் ரங்கநாதனிடம் பெண் சாபம் வேண்டாம் என சொன்னேன். சில நடிகைகளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை தவறான வழிகளுக்கு செல்கிறார்கள். தப்பு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.
நான் பயில்வான் ரங்கநாதன் பற்றி புகாரளித்தேன். அவர் மற்றவர்கள் பற்றி பேசுவதை குறைத்துக் கொண்டார். மனிதன் தவறு செய்யலாம். ஆனால் திருந்தி கொள்ள வேண்டும். சினிமாவில் பார்ட்டிகள் நடப்பது உண்மை. நடிகர், நடிகைகள் மது குடிப்பது எல்லாம் உண்மை. அதையெல்லாம் ஏன் பேச வேண்டும் என்று தான் கேட்கிறேன். ஆனால் சுசித்ரா சொல்வது போன்ற போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக சொல்வதில் உண்மையில்லை” என கூறியுள்ளார்.