மிகப்பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் இயக்குநர்களில் சிலர் அவுட்டோர் ஷூட்டிங்கில் ஜூனியர் நடிகர்களிடம் 10 சதவிகிதம் கமிஷன் பெறுவதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 


காசேதான் கடவுளடா:


ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, பிஸ்கோத், தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் தற்போது “காசேதான் கடவுளடா” படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா, நடிகை பிரியா ஆனந்த், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மார்ச் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


இதில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைக்கு மக்களின் மனம் எப்படி இருக்கும் என்று புரியவே இல்லை. எந்த படத்தை ஏற்று கொள்வார்கள், எந்த படத்தை ஒதுக்கி தள்ளுவார்கள் என்று தெரியவில்லை என கூறினார். மேலும் ஆனால் கடந்த 6 மாதங்களாக கருத்துக்கணிப்பு ஒன்று சொல்வது என்னவென்றால், மக்கள் நல்ல படத்தை ஏற்று கொள்கிறார்கள் என்பது தான்.


சக்தே இந்தியாதான் பிகில்:


அதற்கு உதாரணம் தான் லவ் டுடே படம். இந்த படத்தை மாணவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு படத்தைப் பொறுத்தவரை கதை தான் முக்கியம் பிறகு தான் ஹீரோ எல்லாம். நாயை போட்டு கூட படத்தை ஓட்டி விடலாம். ராமநாராயணன் படத்தை எடுத்து கொள்ளுங்கள். அவர் 28 நாட்களில் படம் எடுத்து 100 நாட்கள் ஓடிய படங்களின் எண்ணிக்கை மட்டுமே 78 ஆகும். அப்படிப்பட்ட மிகப்பெரிய சாதனை படைத்தவர் ராம நாராயணன். 


இந்தியில் சக் தே இந்தியா படம்  ஹாக்கியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஷாருக்கான் தான் அந்த படத்தின் ஹீரோ. அதே படம் தான் தமிழில் பிகிலாக வந்தது. அங்கே ஹாக்கி என்றால் இங்கே கால்பந்து மையமாக வைத்து கதை எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளரைத் தான் எட்டி எட்டி உதைத்தார்கள். 


10 சதவீதம் கமிஷன்:


அப்போது மறைமுகமாக இயக்குநர் அட்லீயை சாடி பேசிய கே.ராஜன், ”அவுட்டோர் யூனிட்டிடம் இருந்தும்,  ஜூனியர் நடிகர்களிடம் 10 சதவீதம் கமிஷன் வாங்குகிறார் இயக்குநர். அதனால் அவருடைய 2 படங்கள் தோல்வியடைந்தது” என  தெரிவித்தார். இதனைக் கேட்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.