மறைந்த இயக்குநர் மனோபாலா குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறியது பொய் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் கடந்த மே 3 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் மனோபாலா உடலுக்கு நேரிலும், அவரின் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்தனர். இசையமைப்பாளர் இளையராஜா மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவிக்க வெளியிட்ட வீடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இளையராஜா விளக்கம்
“என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைந்திருந்த நண்பர் நடிகர், டைரக்டர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராகவும் பணிபுரிந்து, பின்னாளில் தானே சொந்தமாக இயக்குநராக ஆரம்பித்த நேரத்தில் எல்லா காலங்களிலும் என்னைச் சந்தித்தவர்.
என்னைப் பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பாலத்தை தாண்டுகின்ற நேரத்தில் எத்தனை மணிக்கு என்னுடைய கார் பாலத்தை தாண்டுகிறது என்ற நேரத்தை பார்த்து என்னை பார்ப்பதற்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்” என தெரிவித்திருந்தார். ஒருவர் இறந்த நேரத்தில் கூட தற்பெருமை பேசுவாரா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் மனோபாலா குறித்து இளையராஜா சொன்னது பொய் என கடுமையாக சாடியுள்ளார்.
இளையராஜா பற்றி பேச விரும்பல...
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், “மனோபாலா முதலில் நண்பராக தான் பழகினான். அப்புறம் தம்பியாக மாறிவிட்டான். என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியவர்களில் ஒருவர் ஐசரி வேலன், இன்னொருவர் மனோபாலா. அவர் எந்த யூனியனில் போட்டிப் போட்டாலும் ஜெயிப்பான். காரணம் மனோபாலாவை எல்லோரும் நடுநிலையானவராக பார்ப்பார்கள். சிறுபட தயாரிப்பாளர்களுக்கு சொத்து மனோபாலா தான். அவன் சாதி, மத வேறுபாடு அற்றவன். முதலில் இயக்குநராக இருந்தவன் காலமாற்றத்தில் தன்னை மாற்றிக் கொண்டு நடிகராக போய் விட்டான்.
எல்லாமே பொய்:
இளையராஜா சொல்வது போல கோடம்பாக்கம் பாலத்தின் மேல நின்னு பாக்குற அளவுக்கு மனோபாலா இல்ல. அவரது சொல்றது பொய். பிரசாத் லேப்பில் வாடகைக்கு இருந்த இடத்தை சொந்த இடம் என வழக்கு போட்டார். திரைப்பட தயாரிப்பாளர்கள் எல்லாம் செலவு செய்து ட்யூன் போட சொன்னா, அந்த பாட்டெல்லாம் என்னோடது என காப்பி ரைட் பிரச்சினையை உண்டாக்கி தயாரிப்பாளர்களுக்கு துரோகம் பண்ணாரு.
இப்ப ஒவ்வொருவரையும் அவரு அவமானப்படுத்துறாரு. அவர் புத்தி ஏன் இப்படி மாறிவிட்டது என தெரியவில்லை. இளையராஜாகிட்ட இருந்த வந்த ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பெருமையாக நடந்து கொள்ளும் போது, ஒரு எம்.பி., பதவி கிடைக்க பிரதமரை பாராட்டினார். அவர் அப்படி நடக்க பிரதமரின் சில குணங்கள், நற்காரியங்கள் இருக்கலாம். அதை விடுத்து அம்பேத்கரை ஒப்பிட்டு பேசியதுபோல வேற எந்த துரோகம் இல்லை.
இளையராஜாவிற்கு உள்ளே கெட்டவன்:
நான் உண்மையிலேயே அவரைப் பற்றி பேச விரும்பல. இளையராஜா அவ்வப்போது எனக்குள்ளே ஒரு கெட்டவன் இருக்கிறான் என காட்டிக் கொண்டு இருக்கிறார். மனோபாலா மட்டுமல்ல எந்த இயக்குநரும் கோடம்பாக்கம் பாலத்துல அவருக்காக காத்திருந்தது இல்லை” என கே.ராஜன் தெரிவித்துள்ளார்.