விஜய்
நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் இரண்டாம் வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. படம் ரூ.1000 கோடி வசூலீட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வாரம் கடந்தும் ரூ.500 கோடியை எட்டாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. மறுபக்கம் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜன் நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாகி உள்ளது
த்ரிஷா என்ன கொள்கை பரப்பு செயலாளரா ?
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே ராஜன் " தி கோட் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் எல்லாம் இல்லை. படம் வெளியான 4 ஆவது அல்லது 5 ஆவது நாளில் வசூல் அதிகரித்திருக்க வேண்டும் ஆனால் குறையவே செய்தது. இதற்கடுத்து விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். பின் முழுமுழுக்க அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். அவர் எப்படி மக்களை சென்றடையப் போகிறார் என்பது தான் இப்போது கேள்வி. இப்போதே தனது கட்சித் தொண்டர்களையும் ரசிகர்களையும் விஜய் தனக்கு அருகில் நெருகவிடுவதில்லை என்று தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதா செய்தது போலவே தன்னைவிட்டு பத்து அடி தள்ளி நின்றுதான் அவர் எல்லாரையும் சந்திக்கிறார். தனது பாதுகாப்ப்பிற்காக துபாயில் இருந்து பவுன்சர்களை வரவழைத்திருக்கிறாராம். இது அவரது அரசியலுக்கு ஒரு பெரிய பின்னடைவாகதான் இருக்கும்.
ஏற்கனவே தனது கட்சிக் கொடியான மஞ்சள் மற்றும் சிவப்பு நிற சேலையை கட்டி த்ரிஷாவை கோட் படத்தில் ஆட வைத்திருக்கிறார். த்ரிஷா என்ன கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளரா? த்ரிஷாவும் கட்சிப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவதாக தெரிகிறது. இது எல்லாவற்றுக்கும் மேல் தி கோட் படத்தில் விஜய் காந்தி என்று பெயர் வைத்திருக்கிறார். உலகமே ஒரு பெரும் தலைவராக கருதும் காந்தியின் பெயரை வைத்துக் கொண்டால் அவர் அளவிர்கு ஒழுக்கமானவரா விஜய். அதில் ஒரு ஐந்து சதவீதமாவது ஒழுக்கம் இருக்க வேண்டாமா?" என சரமாரியாக விஜயை கே ராஜன் தாக்கி பேசியுள்ளார்