தன்னுடைய ஆசிரியர்களுக்கு காதல் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் வேணுகோபாலன். இவர் அடுத்ததாக “PT சார்” என்ற படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், தியாகராஜன், இளவரசு, பாக்யராஜ் என பலரும் நடித்துள்ளனர். 


இப்படம் ஹிப் ஹாப் ஆதியின் இசையமைப்பில் உருவாகும் 25வது படமாகும். அதில் அவர்  உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். பெண்களுக்கு நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் மே 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 


முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜாலி,கேலி, ஆக்‌ஷன் என அனைத்து கலந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படம் தொடர்பான ப்ரோமோஷனில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளது. 






அதில் பேசியுள்ள அவர், “நான் ஸ்கூல் படிக்கும்போது ரொம்ப ஜாலியான டைப். அதனால் என் உடற்கல்வி ஆசிரியர் சுகுமாரும் நானும் ரொம்ப நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் ஆசிரியர் - மாணவர் உறவு என்றெல்லாம் இருந்தது இல்லை. இதில் ஒரு அழகு என்னெவென்றால் உடற்கல்வி ஆசிரியர் சுகுமாருக்கும், என்னுடைய ஆங்கில ஆசிரியை ரஹத் மேடமுக்கும் காதல் இருந்தது. அப்பவே நான் அவர்களின் காதலுக்கு தூது சென்றிருக்கிறேன். அவர்களுக்கு மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தோம். இந்த படத்தின் கதையை கார்த்திக் வேணுகோபாலன் சொல்லும்போது எனக்கு அதுதான் நியாபகம் வந்துச்சு” என தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே நாம் பள்ளி காலத்தில் உடற்கல்வி ஆசிரியருக்கும், ஏதாவது ஒரு ஆசிரியையுக்கும் காதல் இருப்பதாக கட்டுக்கதைகள் எல்லாம் பேசியிருப்போம், கேட்டிருப்போம். உடற்கல்வி வகுப்புகளை எல்லாம் பிற ஆசிரியர்களுக்கு கடன் கொடுப்பதால் இந்த பேச்சு உண்டாகி எத்தனை தலைமுறை ஆனாலும் மாறாமல் இருக்கிறது என்பதே உண்மை. அதனை ஐசரி கணேஷ் சொன்ன கதை நியாகப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.