சர்வைவர் நிகழ்ச்சி புகழ் உமாபதி மற்றும் அவரது தந்தை நடிகர் தம்பி ராமையா ஆகியோர் இணைந்து நடித்த படம் தண்ணி வண்டி. சம்ஸ்கிருதி, பால சரவணன், விதுலேகா,  தேவதர்ஷினி, வினுதா லால், ஜார்ஜ்,  மதுரை முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம், கடந்த 31 ம் தேதி வெளியானது. இதற்கு தம்பி ராமையா மற்றும் உமாபதி ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான மலேசியாவைச் சேர்ந்த ஜி.சரவணன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தம்பி ராமையா மற்றும் உமாபதி மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பின் அவர் அளித்த பேட்டி இதோ: 


 



தயாரிப்பாளர் சரவணன்


‛‛இந்த கதை முடிவான பின், தம்பி ராமையாவை, அப்பா கதாபாத்திரத்திற்காக என் இயக்குனர் அணுகினார். அப்போது வேறு ஒரு கதாநாயகன் ஒப்பந்தமாகியிருந்தார். அப்போது, தன் மகனுடன், தானும் சேர்ந்து இந்த படத்தில் நடித்தால், படம் ஹிட் ஆகும் என்றும், விளம்பரமும் நல்ல ரீச் ஆகும் என்றும், நான் அழைத்தால் பலரும் விளம்பரத்திற்கு வருவார்கள் என்றும் ஆசை வார்த்தை கூறினார். இயக்குனர் அதை நம்பி, என்னை அழைத்ததால், மலேசியாவில் இருந்து அவசரமாக இங்கு வந்தேன். என்னிடமும் அதே வார்த்தைகளை தம்பி ராமையா பயன்படுத்தினார். 


நான் ஏற்கனே 2 படங்கள் தயாரித்தவன். அது ரெண்டு படுதோல்வி அடைந்த படங்கள். 13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவை நேசித்து மீண்டும் படம் எடுக்கலாம் என களத்திற்கு வந்தேன். ரொம்ப வருசத்திற்கு பின் எனக்கு தெரிந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க வந்தேன். படத்திற்கு நன்றாக இருக்கும் என்பதால், தம்பி ராமையா சொன்னதற்கு நானும் ஒப்புக்கொண்டேன். தம்பி ராமையாவும், அவரது மகன் உமாபதியும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த படம் மிகப்பெரிய ஹிட் படம். எனக்கும் தம்பி ராமையாவுக்கும் ஒரு சின்ன பிரச்சனை. என்னை பழிவாங்க நினைத்து, ஒட்டுமொத்தமாக இந்த படத்தை கெடுத்துவிட்டனர். 


சினிமாவில் லாபம், நஷ்டம் பொதுவானது. ஆனால், எனக்கு மனவலியை ஏற்படுத்திவிட்டார். கடந்த 17 ம் தேதி படம் வெளியாக வேண்டியது. 10 ம் தேதி வரை அவர்களிடம் பேசினோம், போன ஏப்ரலில் இசை வெளியிட்டு விழாவுக்கும் இதே தான் நடந்தது. அப்போதும் ஒத்துழைக்கவில்லை . கடந்த 17 ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்ததை, 31 ம் தேதிக்கு ஒத்திவைத்தோம். மலேசியாவில் வெள்ளத்தால் என் வீடு பெரிய பிரச்சனையில் சிக்கியது. அதையும் சமாளித்து, இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தேன். இன்னும் இந்த படம் வெளியாகாமல் தள்ளிப் போனால், என் மனைவியே என்னை விட்டு போகும் சூழ்நிலை உருவாகும்.


நீங்க வர வேண்டாம், ஒரு வீடியோவாவது கொடுங்கள் என்றேன். அதுவும் தரவில்லை. நான் போய், கூவி கூவி விற்றால் இந்த படம் விற்குமா? என்னிடம் சொன்னபடி இவர்கள் வந்து விளம்பரம் செய்திருக்க வேண்டாமா? இது அவர்களுக்கு புதிதல்ல, இதோ போல் இரு தயாரிப்பாளர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆயிரம் கூடை பூக்கள் என ஒருபடம். தம்பி ராமையா தான் டைரக்டர். வேறு ஒரு தயாரிப்பாளர். உமாபதி தான் ஹீரோ. 60 சதவீதம் படத்தை எடுத்துவிட்டு குப்பையில் போட்டு விட்டார்கள். 


 



உமாபதி-தம்பி ராமையா


அதற்குப் பின் இன்னொரு படம் பண்ணி, அதுவும் அப்படியே கிடைக்கிறது. இவங்களுக்கு இது தான் வேலை. எஸ்.ஏ.சந்திரசேகர் தன் சொத்தை விற்று தன் மகனை முன்னுக்கு கொண்டு வந்தார். ஆனால், இவர், ஒரு தந்தையாக அவரின் சுய வெறுப்புக்காக தன் மகனின் வளர்ச்சியை தடுக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது, சின்னச்சின்ன விசயங்களுக்கு போன் செய்வார். நான் அதை தயாரிப்பாளராக அனுமதிக்கவில்லை. அதை பிடித்துக் கொண்டார். பிரச்சனை அது தான். என் மீது தவறு இருந்ததாக வைத்து கொண்டால் கூற, அதற்காக நான் மன்னிப்பு கூட கேட்டுவிட்டேன். 


 



தண்ணி வண்டி பாடல்


சர்வைவர் நிகழ்ச்சிக்கு உமாபதி வந்தபின், நான் என் சொந்த காசில் பிரமோட் பண்ணேன். உமாபதி நல்ல பையன். ஆனால், தம்பி ராமையாவின் தவறான செயல், உமாபதி வாழ்க்கை பாதிக்கும். நான் இந்த படத்திற்கு ரூ.4 கோடி செலவு செய்திருக்கிறேன். நான் அதை கேட்கவில்லை. என் மீது தவறு இருந்தால், என்னை அழைத்து பேசியிருக்கலாமே. என்னுடைய மேனேஜர் பேசுறாங்க, என்னோட பிஆர்ஓ பேசுறாங்க, எந்த ரெஸ்பான்ஸ்சும் இல்லை. படம் கடந்த 31ம் தேதி ரிலீஸ் ஆகியும், சரியான புரமோஷன் இல்லாததால், ரீச் ஆகவில்லை. எனக்கு நஷ்ட ஈடு வேண்டும். அதற்காக புகார் செய்துள்ளேன். படம் நஷ்டமில்லை; நல்லா தான் போகுது. ஆனால், ஹீரோவாக படத்தின் புரமோஷனுக்கு வர வேண்டும் என்கிற ஒப்பந்தம் இருக்கிறது. அதை மீறியிருக்கிறார்கள். என் பையனுக்காக உடல் உழைப்பை தருகிறேன் என்றார். பின்னர் பணம் கேட்டார். அப்புறம் பேரம் பேசினார். அப்புறம் டிஸ்கவுண்ட் செய்தார். பின்னர், பேலன்ஸ் தந்தால் தான், டப்பிங் பேசுவேன் என்றார். இதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லலாம்னா... அங்கே அதை விட பிரச்சனை இருக்கு.