நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்துக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆதிபுருஷ்
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்”. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் தியேட்டரில் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர். இது இணையத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
சில தினங்களுக்கு முன், ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதன் நிகழ்ச்சி திருப்பதியில் நடந்தது. அப்போது பேசிய இயக்குநர் ஓம் ராவத், “ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அப்படி பார்த்தால் பேய் படங்கள் வெளியாகும் போது அவர்களுக்காக ஒரு இடத்தை விட்டு வைக்க வேண்டுமா என சரமாரியாக கேள்வி எழுப்பினர். ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஆதி புருஷ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வித்தியாசமாக ப்ரோமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த படத்துக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எப்படி பெறுவது?
அதாவது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 படங்களின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால்ராமர் மீது கொண்ட பக்தியின் காரணமாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள அரசு பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அவர் இந்த இலவச டிக்கெட்டுகளை வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆதிபுருஷ் வாழ்நாளில் ஒருமுறை வரும் திரைப்படம், அனைவரும் கொண்டாட வேண்டிய படம். ஸ்ரீராமர் மீதுள்ள எனது பக்தியின் காரணமாக, அரசு பள்ளிகள், அனாதை இல்லங்களுக்கு 10,000 டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளேன். தெலுங்கானா முழுவதும் உள்ள முதியோர் இல்லங்கள் இலவசம். டிக்கெட்டுகளைப் பெற உங்கள் விவரங்களுடன் Google படிவத்தை நிரப்பவும் என தெரிவித்துள்ளார். இதனை தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பெற முடியாது.
வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு மேலும் ரூ.100 கோடி செலவு செய்து டிரெய்லரை வெளியிட்டது. ஆனால் இதுவும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.