படம் வெளியாவது தொடர்பான சம்பவத்தில் திரைப்பட விநியோகஸ்தரை, அப்படத்தின் தயாரிப்பாளர் ஆட்களை ஏவி தாக்கிய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். இவர் திரைப்பட விநியோகஸ்தராக உள்ள நிலையில் விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகத்தில் மனம் கொத்தி பறவை, தனி ஒருவன் ஆகிய படங்களின் படத்தொகுப்பாளர் கோபி பிரசன்னா, பென்சீர் ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நடிகர் யோகிபாபு நடிப்பு ‘ஷூ’ என்ற படம் வெளியானது. 


இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும் மற்றும் சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1.10 கோடிக்கு விலை பேசியுள்ளனர். இதில் ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு மதுராஜ்  சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.






இதன் காரணமாக சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகியதாகவும், இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பணத்தை தராமல் அவர் இழுத்தடித்ததால் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் 13 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது. அவர்கள் அங்கிருந்த கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து  உதைத்துள்ளனர். 


பின்னர் அவர்களை காரில் கடத்திச் சென்று தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்ட கும்பல், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு ஊழியர்கள் இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.