Hulk Hogan Dies: 90-களில் பிறந்த நபர்களுக்கு தொழில்முறை மல்யுத்தம் என்றாலே நினைவிற்கு வருபவர்களில் ஹல்க் ஹோகன் தவிர்க்க முடியாத நபர் ஆவார்.

ஹல்க் ஹோகன் மரணம்:

முறுக்கேறிய கட்டுமஸ்தான உடல், கடா மீசையுடன் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக கத்தியபடி அரங்கத்திற்குள் நுழைந்து, சட்டையை கிழித்தபடி களத்திற்குள் இறங்கி பலரையும் பிரம்மிக்கச் செய்தவர் ஹல்க் ஹோகன். WWE எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டிகளின் அடையாளமாகவே திகழ்ந்த இவர், தனது 71வது வயதில் இறந்துள்ளதாக அறிவிக்கபொபட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தொழில்முறை மல்யுத்த ரசிகர்களை, குறிப்பாக தாங்கள் கொண்டாடிய மேலும் ஒரு நாயகனும் மறைந்துவிட்டதாக 90ஸ் கிட்ஸ்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்க் ஹோகனின் மறைவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மரணத்திற்கு காரணம் என்ன?

ஃபுளோரிடாவில் உள்ள க்ளியர் வாட்டர் பகுதியில் வசித்து வந்த ஹல்க் ஹோகன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக WWE வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பாப் கலாச்சாரத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWE உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். ஹோகனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு WWE தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

6 முறை உலக சாம்பியன்:

டெர்ரி போலியா என்பதே ஹல்க் ஹோகனின் உண்மையான பெயராகும். இவர் WWE-ன் நீண்ட கால வரலாற்றில் அழிக்க முடியாத தடங்களை பதிவு செய்துள்ளார். 1985ம் ஆண்டு நடைபெற்ற முதல் வ்ரெஸ்டில்மேனியா போட்டியில் கவனம் ஈர்கக்கூடிய போட்டியாளராக திகழ்ந்தார். பல ஆண்டுகள் இந்த போட்டியில் பங்கேற்று ஆண்ட்ரே தி ஜெயண்ட், ரேண்டி சாவேஜ், ராக் மற்றும் தற்போதைய WWE சேர்மேன் ஆக உள்ள வின்ஸ் உள்ளிட்ட பலரை களத்தில் எதிர்கொண்டுள்ளார். WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை 6 முறை வென்ற ஹல்க் ஹோகன், 2005ம் ஆண்டு WWE ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டார்.

பாலியல் வீடியோ சர்சை:

2016 ஆம் ஆண்டில், காக்கர் மீடியாவிற்கு எதிரான பாலியல் டேப் வழக்கில் ஹோகனுக்கு 115 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க ஃப்ளோரிடா நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 25 மில்லியன் டாலர்களை தண்டனை இழப்பீடாகச் சேர்த்தது. 2012 ஆம் ஆண்டில் காக்கர் தனது முன்னாள் நண்பரின் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வெளியிட்டதை அடுத்து ஹோகன் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பதிவு தனது தனியுரிமையை மீறுவதாக அவர் வாதிட்டார். மூன்று வார விசாரணை முழுவதும் ஹோகன் சிரித்துக்கொண்டே கருப்பு நிற உடை அணிந்திருந்தார். 2012ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும், "நான் எங்கு வந்தாலும், மக்கள் என்னை இன்னும் சாம்பியன் போலவே நடத்துகிறார்கள்," என்று ரசிகர்களின் ஆதரவைப் பற்றி பல இடங்களில் ஹல்க் ஹோகன் பெருமிதத்துடன் தெரிவித்து வந்தார்.