நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தனுஷ் - சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் இணைந்துள்ளது. ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






இதனிடையே கேப்டன் மில்லர் படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர், தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 






முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியிருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகைகள் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.