அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 






காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ். அழகிரி தலைமையில் இன்று புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நிறைவேற்றப்பட்டது. வேப்பேரியில் நடைபெற்ற ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் பின்வருமாறு. “ கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சியில் மக்களை பிளவுப்படுத்துகிற அரசியலுக்கு எதிராக இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துவக்கி பெருமை சேர்த்த தலைவர் ராகுல்காந்தி லட்சோப லட்சம் தமிழக காங்கிரஸ் கட்சியினர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


கன்னியாகுமரியில் தொடங்கிய 3 ஆயிரத்து 500 கி.மீ, 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இந்திய மக்களின் எதிர்கால நலன் கருதி, தமது நடைபயணத்தின் மூலம் தம்மை கடுமையாக வருத்திக் கொண்டுள்ள ராகுல்காந்தியை இந்த கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது, போற்றுகிறது, வாழ்த்துகிறது. சுதந்திர இந்தியா காணாத அசாதாரண சூழல் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ளது. வகுப்புவாத அரசியலில் இந்தியா சிக்கிக்கொண்டுள்ளது.




இதனால், மக்கள் பிளவுபடுத்தப்பட்டு நல்லிணக்கம் சீர்குலைந்து வளர்ச்சி தடைபட்டுள்ளது. இதில் இருந்து, இந்திய மக்களை மீட்பதற்கும், 2024 மக்களவைத் தேர்தலில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் வெற்றி பெறவும், அகில இந்திய காஙகிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தியை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும். இப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வதே ஒளிமயமயமான இந்தியாவிற்கு வழிவகுக்கும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கே.எஸ். அழகிரி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை, ஜெயக்குமார் எம்.பி. முன்மொழிந்தார். கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., ஞானி அனந்தன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் வழிமொழிந்தனர்.