1979ல் ஈரானில் நடந்த புரட்சிக்குப் பிறகு அமைந்த அரசு பெண்களுக்கான கட்டாய ஆடை முறையினை அரசாணை ஆக்கியது. அதன்படி, ஹிஜாப் அணியாமல் வரும் பெண்களை அரசு அலுவலங்களுக்குள் அனுமதிக்க கூடாது எனவும், ஹிஜாப் அணியாத பெண்களை அலுவலகங்களில் வேலைக்கு சேர்க்க கூடாது எனவும் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதற்கு எதிராக அவ்வப்போது தனி நபராகவும், குழுவாகவும் சில போராட்டங்கள் நடப்பதும் பின்னர், அது கவனம் பெறாமல் போவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது ஹிஜாப் அணிவதற்கு  எதிராக ஈரானில் ஏற்பட்டுள்ள போராட்டம் ஈரானைக் கடந்து வெளி நாடுகளிலும் அதற்கான ஆதரவினைப் பெற்றுள்ளது. 


கடந்த நான்கு வாரங்களுக்கு முன்னதாக, மஹ்சா அமினி என்பவர், செப்டம்பர் 13 அன்று, தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தனது சகோதரர் மற்றும் பிற உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றபோது ஹிஜாப் அணியவில்லை எனவும், முடியை வெட்டி விட்டார் எனவும் கூறி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் காவல் நிலையத்தில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஹ்சா அமினி, மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறீத்து காவல் துறை அவர் இயற்கையாக இறந்துவிட்டார் என கூறுயுள்ளனர். ஆனால், அங்குள்ள சமூக ஆர்வலர்களின் கூற்றுப்படி, அவரது மரணத்திற்கான காரணம் தலையில் மிகவும் பயங்கரமான அடி விழுந்ததுதான் என்கின்றனர். 






இந்த சம்பவத்திற்குப் பிறகு, கடந்த இரண்டு வாரங்களாக ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் இறங்கி உடை அவரவர் உரிமை எனவும்,மஹ்சா அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டும்  போராடி வருகின்றனர்.  உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஈரானியப் பெண்களின் அவலத்திற்கு ஒற்றுமையை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை  பொது இடங்களில் நடத்தி வருகின்றனர். 


இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”ஈரான் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் எழுந்து நின்று குரல் எழுப்புகிறார்கள். பகிரங்கமாக தலைமுடியை வெட்டுகிறார்கள் மற்றும் பல வகையான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஹிஜாப் 'முறையற்ற முறையில்' அணிந்ததாகக் கூறி ஈரானிய அறநெறி காவல்துறையால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்ட  மஹ்சா அமினியின் மரணத்திற்கு  எதிர்ப்பு தெரிவிக்கிறது. பல ஆண்டுகளாக கட்டாய மௌனத்திற்குப் பிறகு பேசும் பெண்களின்  குரல்கள் இப்படித்தான் எரிமலையைப் போல சரியாக வெடிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


 மேலும் அவர், "உங்கள் தைரியம் கண்டு நான் பிரமிக்கிறேன். ஆணாதிக்க உலகத்திற்கு சவால் விடுவது மற்றும் உங்கள் உரிமைகளுக்காக போராடுவதும் அதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைப்பது எளிதானது அல்ல. ஆனால், நீங்கள் தைரியமான பெண்கள். எதையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் செய்கிறீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


போராட்டக்காரர்களின் கோரிக்கைக்ளைக் கேட்டு அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுமாறு அதிகாரிகளையும் அதிகாரத்தில் உள்ளவர்களையும் பிரியங்கா வலியுறுத்தி உள்ளார். "இந்த இயக்கம் நீடித்த விளைவைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, நாம் அவர்களின் அழைப்பைக் கேட்க வேண்டும், பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, பின்னர் நாம் அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில்  பாதிப்படைந்த  அனைவரையும் நாம் ஒன்றினைக்க வேண்டும். நமது குரலை அதிகாரப்படுத்த   நமது எண்ணிக்கை மிக  முக்கியம். இந்த இயக்கத்திற்கு, தகவலறிந்த அனைவரும் குரல் கொடுங்கள், இந்தக் குரல்கள் இனி அமைதியாக இருக்கக் கூடாது. நான் உங்களுடன் நிற்கிறேன். ஜின், ஜியான், ஆசாதி... பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்," என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.