பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான நடிகை மீரா சோப்ரா, நிலா என்ற பெயரில் தமிழில் அன்பே ஆருயிரே, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை, கில்லாடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு பெரிதாக மார்க்கெட் உருவாகாத நிலையில், மும்பையில் வசிக்க தொடங்கினார். இந்நிலையில், மும்பை வடிவமைப்பாளர் ரஜிந்தர் திவான் என்பவர் மீது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பை போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அப்போதே போலீசார் எப்.ஐ.ஆரும் பதிவு செய்திருந்தனர். ஆனாலும் ராஜீந்தர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொறுமையிழந்த நடிகை நிலா ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டு, மஹாராஷ்டிரா முதல்வரையும் டேக் செய்திருந்தார்.



நடிகை நிலா இருமாதங்களுக்கு முன் அளித்த புகாரில், ‘மும்பை அந்தேரி பகுதியிலுள்ள என் புதிய வீட்டை வடிவமைப்பாளர் ரஜிந்தர் திவானுக்கு 17 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தில் வாடகைக்கு விட்டிருந்தேன். ஒப்பந்த தொகையில் பாதி பணத்தை மட்டுமே அட்வான்ஸ் கொடுத்து இருந்தார். அவரை சந்தித்து மீதி பணம் கேட்டபோது, வாக்குவாதம் செய்ததுடன், தகாத வார்த்தைகள் பேசி அவமானப்படுத்தினார். அதுமட்டுமின்றி என்னை கொன்றுவிடுவதாக கொலை மிரட்டலும் விடுத்தார். என் வீட்டில் இருந்துகொண்டு, என்னையே வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டார். அவரது பணியாளர்களை வைத்து என்னை அச்சுறுத்தினார். அந்த சம்பவத்துக்கு பிறகு அந்த வீட்டில் அவர் தாங்கவில்லை. நான் சென்று காணும்போது அங்கே அவர் இல்லை. அவர் போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு கொடுக்க வேண்டிய தொகையையும் தரவில்லை, தராமல் அந்த ஊரிலிருந்தே மாயமாகி இருந்தார்.’ என்று தெரிவித்திருந்தார்.



அவர் தந்த இந்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட எப்.ஐ.ஆரின் படி ரஜிந்தர் திவான் மீது மும்பை போலீசார் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால், போலீசார் மீது கொலை மிரட்டல் சம்மந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று நிலா குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நீங்கள் வசிக்கும் இடத்தில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அவர்களுக்கான பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், சட்டத்தை பாதுகாப்பவர்கள் எதற்காக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்? தனியாக வசிக்கும் பெண்ணை (என்னை) பாதுகாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அந்த பதிவை மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம், அமைச்சர் ஆதித்யா தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.