தமிழ் சினிமாவில் தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு தென்னக சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பாலிவுட் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவரானார். அதன் பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிலேயே முகாமிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா , பிரபல நடிகரும் , பாப் இசை பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் மால்தி மேரி என்னும் பெண் குழந்தையும் உள்ளார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியாவிற்கு வரவுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரியங்கா சோப்ரா, "இறுதியாக... வீட்டுக்குப் போகிறேன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு" என குறிப்பிட்டு , மும்பைக்கான தனது போர்டிங் பாஸ் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய பாலிவுட் படங்களில் எதிலும் ஒப்பந்தமாகியிருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரியங்கா சோப்ரா அண்மையில் தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மால்தி மேரியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மால்தி மேரியின் முதல் தீபாவளி என்பதால் அம்மா பிரியங்காவும் , மகளும் ஒரே மாதிரியான லெஹங்காவில் ட்வின்னிங் மோடில் கலக்கினார்கள் . நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவருமே வெவ்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் , இரண்டையுமே கொண்டாட தவறுவதில்லை. மகள் மால்தி பிறந்தவுடன் பிரியங்கா சோப்ரா இப்போதுதான் முதல் முறையாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.