இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'டிமான்டி காலனி 2' திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் மீது மக்கள் மத்தியில் மிகுதியான எதிர்பார்ப்பு இருந்தது. திகிலான ஹாரர் ஜானரில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விறுவிறுப்பான கதைக்களம், பல ட்விஸ்ட், திகிலூட்டும் காட்சிகள், மிரட்டலான பின்னணி இசை என ஒரு பயமுறுத்தும் பேய் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்து இருந்தது. இதில் அருள் நிதிக்கு இணையான ஒரு கேரக்டரில் டெபி என்ற கதாபாத்திரத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். பிரியா பவானி ஷங்கரின் அசத்தலான நடிப்பும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அவரின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி ஷங்கர் கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், மேயாத மான், ஓ மணப் பெண்ணே, யானை, ரத்னம், பொம்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். பல படங்களில் நடித்து இருந்தாலும் அந்த படங்கள் தோல்வி அடைந்தாள் அதற்கு காரணம் பிரியா பவானி ஷங்கர் தான் என பல கடுமையான விமர்சனங்களும் ட்ரோல்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வந்தன. முதலில் இது போன்ற நெகட்டிவ் விமர்சனங்களை கண்டு மனமுடைந்து போன பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட போது இது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
சினிமா என்பது ஒரு ஆள் சம்பந்தப்பட்டது கிடையாது. அப்படி இருக்கையில் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் ஒரு நபர் தான் என்பது எவ்வளவு பிற்போக்கு தனமான விஷயம். மேயாத மான் படம் என்னால தான் நல்ல ஓடுச்சுனு யாரும் சொல்லல அப்படி இருக்கும் போது நான் நடிச்ச படம் பிளாப் ஆனா அதுக்கு நான் மட்டுமே எப்படி காரணமாக இருக்க முடியும் என மிகவும் அதிரடியாக பதில் அளித்து இருந்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இப்படி பல ட்ரோல்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த அனைவரையும் நோஸ் கட் செய்வது போல அவரின் 'டிமான்டி காலனி 2' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.