மலையாள சினிமாவில் கருப்பு பணம் புழங்குவது தொடர்பாக விவகாரத்தில் தான் சிக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார். 


மலையாள சினிமாவில் கருப்பு பணம் 


கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் உள்ள வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் மலையாள சினிமாவில் கருப்பு பணம் கோடிக்கணக்கில் புழங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து 42 இடங்களில் சோதனை நடைபெற்றது. 


குறிப்பாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த இந்த சோதனையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜூம் ஒருவர். 


25 கோடி ரூபாய் அபராதம்:


மேலும் சுமார் ரூ.225 கோடி அளவுக்கு கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.  இப்படியான நிலையில் இந்த விவகாரத்தில் பிருத்விராஜ் சுமார் 25 கோடி ரூபாய் அபராதம் வருமான வரித்துறையினரிடம் செலுத்தியதாக மலையாளத்தின் பிரபல ஊடகங்கள், யூட்யூப் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிருத்விராஜ், தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். 


கடுப்பான பிரித்விராஜ் 


இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஊடக நெறிமுறைகள் வேகமாக மறைந்து வருகிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான மற்றும் தனிப்பட்ட முறையில் ஒருவரை புண்படுத்தும் ‘பொய்யை’ செய்திகள் என்ற பெயரில் பரப்புவது அனைத்து ஊடக நெறிமுறைகளையும் மீறுவதாகும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக எந்த எல்லை வரையும் போவேன். செய்திகளில் சொல்லப்பட்டபடி எந்த வித அபராதமும் நான் செலுத்தவில்லை’ என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். 


பிருத்விராஜின் சினிமா வளர்ச்சி


கேரளாவைச் சேர்ந்த பிருத்விராஜ் இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத்தலைவன் என பல படங்களில் நடித்தார். 


2019ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த பிருத்விராஜ், ப்ரோ டாடி என்ற படத்தையும் எடுத்துள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் ஆடு ஜீவிதம் படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Raavana Kottam Review: சாதிய கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணமா இராவண கோட்டம்..? - சுடச்சுட விமர்சனம்..!