L2E1stLook: கடந்த 2019ம் ஆண்டு மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிஃபர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. விமர்சனத்தில் நல்ல வரவேற்பை பெற்ற லூசிஃபர் படம், ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் மோகன்லால் இறுதி காட்சிகளில் ஆபிரகாம் என்ற டான் ஆக வந்து மிரட்டி இருப்பார். 

லூசிபர் 2:


முதல் பாகத்தை தொடர்ந்து லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும்  என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கு 'L2 எம்புரான்’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் லூசிஃபர் 2 ப ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  எம்புரான்' (லூசிபர் 2)  படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும்  ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

இந்த பாகத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக படம் உருவாகியுள்ளதாகவும் படம் ரிலீசாகி தென்னிந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் படத்தின் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள லூசிஃபர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், அதிரடியான தோற்றத்தில் மோகன்லால் தோன்றியுள்ளார். தீபாவளி பரிசாக மோகன்லால் ரசிகர்களுக்கு லூசிஃபர் போஸ்டர் வெளியாகி இருப்பதால் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 





 

இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான லூசிஃபர் கிளிம்ப்ஸ் வீடியோவில், முதல் பாகத்தின் காட்சிகளும், வசனங்களும் சேர்த்து இரண்டாம் பாகம் தொடர்கிறது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

 

முன்னதாக லூசிஃபர் முதல் பாகத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். அதை மோகன் ராஜா தயாரித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதால் அதுவும் ரீமேக் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.