தன்னுடைய அடுத்தப்படத்தையும் ஓடிடியில் வெளியிடுகிறார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்
மலையாள திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழிலும் பிரித்விராஜ் சில படங்களில் நடித்துள்ளார். பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் தவிர தெலுங்கு , இந்தியிலும் கூட படம் நடித்துள்ளார் பிரித்விராஜ். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். பிரித்விராஜ் இயக்கிய லூசிபையர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் கமர்ஷியல் கதையைக் கொடுத்து வெற்றியை ருசித்தார். இப்போது மோகன்லாலை வைத்து ப்ரோடாடி என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
பிரித்விராஜ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கோல்ட் கேஸ். த்ரில்லர் மூவியாக உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் குருதி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிரித்விராஜ், இந்த ஓணத்தில் உங்கள் உற்றார், உறவினர்களுடன் நெருக்கமாக இருங்கள். குருதி படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் 11ம் தேதி குருதி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அறிவிப்பை படத்தின் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் பிரித்விராஜ். இப்படத்தில் ரோஷன் மேத்தீவ், ஷைன் டோம், மம்முக்கோயா, முரளி கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.
படக்குழு திட்டமிட்டப்படி அனைத்தும் நடந்திருந்தால் மே 13ம் தேதியே படம் திரையரங்கில் வெளியாகி இருக்கும். ஆனால் கொரோனா தாக்கத்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. இன்னும் கொரோனா ஒழிந்துவிடாத இந்த சூழலில் திரையரங்கு திறக்கப்படுவது குறித்து எந்த விவரமும் இல்லை. அதனால் குருதி படக்குழு ஓடிடியை தேர்வு செய்துள்ளது.
குருதி திரைப்படத்தை மனு வாரியர் இயக்கியுள்ளார். இப்படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் இயக்குகிறார். அதாவது பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனமே அவரது படத்தை இயக்குகிறது. இந்தப்படம் குறித்து பேசிய பிரித்விராஜ், 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். என்னுடைய அனுபவத்தில் குருதி திரைப்படம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த ஒரு திரைப்படம் எனத் தெரிவித்தார்.