டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரரை வென்றார். இரண்டாவது சுற்றில் அவர் இஸ்ரேல் வீரரிடம் ஷூட் ஆஃப் முறையில் தோல்வி அடைந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடவர் தனி நபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் ரஷ்ய வீரர் கால்சனை எதிர்த்து முதல் சுற்றில் விளையாடினார். அதில் 6-0 என்ற கணக்கில் வென்றார். 


இந்நிலையில் இரண்டாவது சுற்று போட்டியில் பிரவீன் ஜாதவ் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள அமெரிக்க வீரரான எலிசன் ப்ராடியை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 28-27 என்ற கணக்கில் எலிசன் வென்றார். அத்துடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டையும் 27-26 என்ற கணக்கில் எலிசன் வென்றார். இதன்மூலம் 4-0 என முன்னிலையை அதிகரித்தார். 


 






மூன்றாவது செட்டை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு பிரவீன் ஜாதவ் தள்ளப்பட்டார். அதில் சற்று தடுமாறிய பிரவீன் ஜாதவ் இரண்டு முறை 8 புள்ளிகள், 7 புள்ளிகள் எடுத்தார். எலிசன் 26-23 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 6-0 என்ற கணக்கில் எலிசன் போட்டியை வென்றார்.  பிரவீன் ஜாதவ் தனிநபர் பிரிவு போட்டிகளிலிருந்து வெளியேறினார். 


முன்னதாக கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள்  காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தனர். அதேபோல் ஆடவர் குழு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் ஆகியோரும் காலிறுதிச் சுற்றில் தென்கொரியா அணியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினர்.  இன்று நடைபெறும் மகளிர் தனிநபர் பிரிவு போட்டியில் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூடான் நாட்டைச் சேர்ந்த கர்மாவை எதிர் கொள்ள உள்ளார். இந்தப் போட்டி மதியம் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.


மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் தனி நபர் வில்வித்தை : இரண்டாவது சுற்றில் தருண்தீப் ராய் தோல்வி