ஆடு ஜீவிதம் படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் 98 கிலோவில் இருந்து 68 கிலோவுக்கு எடை குறைத்துள்ளார்.


ஆடு ஜீவிதம்


பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. பிளெஸ்ஸியின் இயக்கம் , ரஹ்மானின் இசை மற்றும் பிருத்விராஜின் நடிப்பு என படத்தின் நிறைய அம்சங்கள் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.


பிருத்விராஜூக்கு குவியும் பாராட்டுக்கள்


நடிகர் பிருத்விராஜ் இப்படத்திற்காக கடந்த 14 ஆண்டுகளாக தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயார்படுத்தி வந்துள்ளார். இப்படத்தில் அவரது  நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். பிருத்விராஜ் 2011-ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்த பேட்டியில் அவர் “என்னுடைய தந்தையின் பெயரால்தான் எனக்கு முதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பிறகு என்னுடைய கடுமையான உழைப்பினால்தான் மற்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கினே. என் ஒருவனால் மட்டுமே மலையாள சினிமாவை முற்றிலுமாக மாற்றிவிட முடியாது. ஆனால் நானும் ஒரு பெரிய இயக்கத்தில் ஒரு பங்காக இருக்க நினைக்கிறேன். என்னுடைய  நடிப்பு வாழ்க்கை முடிவதற்குள் மலையாள சினிமாவின் வளர்ச்சியில் என்னுடைய பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கடும் விமர்சனங்கள் வந்தது. 


30 கிலோ எடை குறைப்பு


அன்று பிருத்விராஜ் பேசியதை கேலி செய்த பலர் இன்று அவரை பாராட்டி வருகிறார்கள். தனது வாழ்நாளில் சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்படத்தின் தொடக்கத்தில் வாட்டசாட்டமாக தோன்றும் பிருத்விராஜ் படத்தின் இறுதி காட்சிகள் வயிறு ஒடுங்கி தோன்றி பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்.


இந்தப் படத்திற்காக பிருத்விராஜ் 98 கிலோவில் இருந்து 68 என 30 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எடை குறைப்பின்போது பிருத்விராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.