தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரின் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி ஆகும். 15.5 டி.எம்.சி தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும்.
தற்போது கேரள மாநிலம் மற்றும் முல்லைப்பெரியாறு, தேக்கடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர் மட்டம் பல அடி வேகமாக உயர்ந்ததுவிட்டது. பல ஆண்டுகளாகவே முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருவது நாம் அறிந்ததே!. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சித்து வரும் சூழலில், கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் கேரள அரசோ பழமையான முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் , அணை உடைந்தால் பல லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பார்கள் என்கிறது. உண்மையில் முல்லை பெரியாறு அணையை இடிக்க தேவையில்லை, பராமரிப்பு பணிகள் மட்டுமே போதுமானது என்கிறது தமிழக அரசு. இது குறித்த வழக்குகளும் ஆய்வுகளும் நடைப்பெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பெருமழை காலத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை பூதாகரமாக வெடிப்பது வழக்கம் அந்த வகையில் #DecommisionMullaperiyarDam என்ற முன்னெடுப்பின் மூலம் கேரள நெட்டிசன்கள் முல்லை பெரியாறு அணையை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான பிரித்திவிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், என்னவாக இருந்தாலும் 125 வருட பழமையான அணையின் தற்போதைய கட்டமைப்பு செயல்படும் வகையில் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது! “ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு கீழே தமிழக நெட்டிசன்கள் “முல்லைப்பெரியாரை விட கேரளாவில் பலவீனமான எத்தனையோ அணைகள் உண்டுனு கேள்விப்பட்டிருக்கேன், கேரள நிலப்பகுதிகளே பலவீனமாக இருப்பது வேறு விஷயம்.. இடுக்கியே ஒரு ஹைட்ரொ பாம்னு அதன் மேல் விமர்சனம் வைத்த வல்லுனர்களும் உண்டு.. இப்போது எதற்காக இத்தகைய பிரச்சாரத்தை கேரளா முன்னெடுக்கிறது?” உள்ளிட்ட பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பிரித்திவிராஜ் தமிழில் மொழி, இராவணன், காவியதலைவன்,நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.