Kantara OTT Release: ஓடிடியில் காந்தாரா படம்பார்த்த ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...என்ன நடந்தது?
கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது.

இந்திய திரையுலகில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய காந்தாரா படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிருப்தியடையும் வகையில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிலையில் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்தது. காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
Just In




இதன் காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு காந்தாரா வெளியானது. இப்படம் நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. மேலும் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் தொடங்கி ஒட்டுமொத்த திரையுலகமே இப்படத்தை கொண்டாடியது.
50 நாட்களை கடந்த நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் படக்குழு ஓடிடி ரிலீஸ் பற்றி அறிவித்தது. அதன்படி இன்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் காந்தாரா படம் இடம் பெற்றுள்ளது. நள்ளிரவு முதலே படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வண்ணம் படத்தில் வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இந்த பாடலுக்கு தைக்குடம் பிரிட்ஜ் பேண்ட் குழுவினர் கோழிக்கோடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றி வரும் இந்த இசைக்குழு 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட நவரசம் பாடலின் பாடலின் காப்பிதான் வராஹ ரூபம் பாடல் என்பதால் காப்புரிமையை காக்க வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், தியேட்டர்களில் பாடலை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தனர். இதனால் இப்பாடல் அமேசான் பிரைமில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.