மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். சிலர் மருத்துவமனைக்கு சென்று விஜயகாந்தின் நலம் விசாரித்தனர். மருத்துவமனை அறிக்கையில் விஜயகாந்தால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறப்பட்டது. 

 

விரைவில் வீடு திரும்பும் விஜயகாந்த்:


 

இதற்கிடையே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவத்தொடங்கின. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியபோது, “கேப்டன் நன்றாக உள்ளார். ஏன் வதந்திகளை தொடர்ந்து பரப்புகிறீர்கள்...அவரை பற்றி தவறான செய்தியை போடுவதற்கு முன்னால் எங்களிடம் ஒரு வார்த்தை கேட்கலாமே....விஜயகாந்த் இன்றும் நன்றாக உள்ளார். அவர் விரைவில் வீட்டிற்கு வர உள்ளார். அவரை பற்றிய வதந்தியான செய்தி ஒரு மனைவியாக எந்த அளவுக்கு எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..? 

 

நல்லா இருக்கும் கேப்டனை அந்த அளவுக்கு கேவலப்படுத்தி விட்டீர்கள். அவர் மேல் எதற்கு இத்தனை வன்மம்? அவர் நன்றாக உள்ளார். இரண்டு, மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்துடுவார். அதை அறிவித்துவிட்டு தான் நாங்கள் வீட்டிற்கு செல்வோம்” என கூறியுள்ளார்.  மேலும், ”நீங்கள் யாரும் அவருடன் இல்லை. கேப்டன் கூட நான் ஒரு ஆள் தான் இருக்கிறேன். அவர் நலமுடன் இருப்பதை நான் தான் கூறமுடியும். அவரை பற்றிய வதந்திகளால் மனவருத்தம் அடைந்துள்ளேன். தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டார். 

 

முன்னதாக விஜயகாந்த் நிலை மோசமாக இருப்பதாக பரவிய வந்ததியால், விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த், அவர் நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். கடந்த சில வாரமாக விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல் அதிகளவில் பரவ தொடங்கியதால், அவருடன் பழகிய திரை பிரபலங்கள் விஜயகாந்த் குறித்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.