தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான ப்ரீத்தி முகுந்தன் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜரின் கொள்ளுப் பேத்தி ப்ரீத்தி முகுந்தன் என்ற தகவல் பல தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மையான பின்னணி குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Continues below advertisement

கணித மேதை ராமானுஜரின் கொள்ளு பேத்தியா ?

உண்மையில், ப்ரீத்தி முகுந்தன் ராமானுஜரின் நேரடி கொள்ளுப் பேத்தி அல்ல. ராமானுஜருக்கு குழந்தைகள் இல்லாததால், அவருக்கு நேரடி வாரிசுகளும் இல்லை. ஆனால், ராமானுஜரின் மனைவி ஜானகி அம்மாள் தத்தெடுத்து வளர்த்த டபிள்யூ.எஸ். நாராயணனின் குடும்ப வழியில் ப்ரீத்தி முகுந்தன் வருவதால், ராமானுஜர் குடும்பத்துடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே சமூக வலைதளங்களில் "ராமானுஜரின் கொள்ளுப் பேத்தி" என்று கூறப்படுகிறது.

யார் இந்த ப்ரீத்தி முகுந்தன் 

திருச்சியைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பொறியியல் படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். சாய் அப்யங்கரின் ஆச கூட பாடலில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் தனது நடனத்தால் கவனமீர்த்தார் . பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தமிழில் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  தொடர்ந்து தெலுங்கில் உருவான கண்ணப்பா , மலையாளத்தில் வெளியான சர்வம் மாயா ஆகிய படங்களில் நடித்தார். 

Continues below advertisement

பல மொழிப் படங்களில் வாய்ப்புகளைப் பெற்ற அவர், சமீபத்தில் வெளியான 'ப்ளாஸ்ட்' திரைப்படத்தின் மூலம் மேலும் கவனம் பெற்றார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. மேலும், அண்மையில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படத்திலும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

தற்போது அவரது கைவசம் மேலும் சில முக்கிய திரைப்படங்கள் உள்ளன. குறிப்பாக, நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள 'தனுஷ் 56' திரைப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று வரும் அவர், தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ப்ரீத்தி முகுந்தன் குறித்து பரவி வரும் குடும்பப் பின்னணி தகவலும் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.