அந்தகன்


பாலிவுட்டில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'அந்தாதூன்' திரைப்படம் தமிழில் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் பிரஷாந்த் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரன், பிரியா ஆனந்த், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தை இயக்குநர் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். அந்தகன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


அந்தகன் பாடலை வெளியிடும் நடிகர் விஜய்


அந்தகன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான அந்தகன் ஆந்தம் பாடலை வரும் ஜூலை 24 ஆம் தேதி நடிகர் விஜய் வெளியிட இருப்பதாக பிரசாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உமாதேவி இப்பாடலுக்கு பாடல்வரிகளை எழுதியுள்ளார். சான்டி மாஸ்டர் நடனம் கற்பித்துள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளார்கள். பிரபுதேவா இந்தப் பாடலை இயக்கியுள்ளார்.  வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்தகன் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.






தி கோட்


பிரபுதேவா , பிரஷாந்த் , விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் தி கோட் . இவர்கள் தவிர்த்து இப்படத்தில் சினேகா , லைலா , வைபவ் , பிரேம்ஜி , மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நடிகை த்ரிஷா இப்படத்தில் கெளர தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. தி கோட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வி.எஃப்.எக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது