இந்திய ராணுவம் குறித்து நடிகர் அக்‌ஷய்குமார் தெரிவித்த கருத்துக்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 






சமீபத்தில்  பிரபல இந்தி நடிகை ரிச்சா சதா வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் கூறிய கருத்து ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அரசின் உத்தரவிற்கு காத்திருக்கிறோம். பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறினால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவை குறிப்பிட்டு ரிச்சா சதா, “கல்வான் ஹாய் சொல்கிறது” என தெரிவித்திருந்தார். 










இந்த பதிவு கடும் சர்ச்சைகளை சந்தித்தது. பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார், இதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. நமது ராணுவ படைகளுக்கு என்றும் நன்றியற்று இருக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். விஷயம் பெரிதாகவே ரிச்சா சதா மன்னிப்பு கேட்டிருந்தார். இதனால் இப்பிரச்சனைக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. 






இந்நிலையில் அக்‌ஷய்குமாரின் ட்வீட்டை சுட்டிக்காட்டியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், ”அக்‌ஷய்குமார் உங்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை. உங்களை விட ரிச்சா சதா நம் நாட்டுக்கு மிகவும் பொருத்தமானவர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ரிச்சா...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்...என தெரிவித்துள்ளார்.






தொடர்ந்து பிரகாஷ்ராஜ் மத்திய அரசையும், அதற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களையும் விமர்சித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.