பிரகாஷ் ராஜ்


தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய நடிகர்களில் ஒருவர்  நடிகர் பிரகாஷ் ராஜ்.  கதாநாயகன், வில்லன், துணைக் கதாபாத்திரம், நகைச்சுவை என தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியவர். தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமாக அறியப்படும் நடிகரான பிரகாஷ் ராஜ் இதுவை மொத்தம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளார். காஞ்சிவரம், அபியும் நானும், ஆசை, இருவர், என பிரகாஷ் ராஜின் நடிப்பை பறைசாற்றும்  படங்கள் நிறைய உள்ளன. 


இருவர்


பிரகாஷ் நடித்த கதாபாத்திரங்களில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தமிழ்ச்செல்வன் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், ஐஷ்வர்யா ராய், தபு, ரேவதி, கெளதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார் பிரகாஷ் ராஜ். அவர் வென்ற முதல் தேசிய விருதும் இதுவே. இருவர் படத்தின் நடித்த அனுபவம் குறித்து பிரகாஷ் ராஜ் முன்பு பேசியுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இருவரில் எனக்கு நடிக்க வாய்ப்பே இல்லை


இந்த காணொளியில் பிரகாஷ் ராஜ் “ ஆசை படத்திற்கு பிறகு எனக்கு  நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன  ஆனால் நான் என் அடையாளம் பதிக்கும் ஒரு கதாபாத்திரத்தில்  நடிக்க ஆர்வமாக இருந்தேன். இருவர் படத்திற்கான வேலைகளில் மணிரத்னம் ஈடுபட்டிருந்தபோது எனக்கு இந்தப் படத்தில் ஏதாவது கதாபாத்திரம் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஆனால்  நான் அந்த படத்தில் நடிப்பதற்கு எந்த கதாபாத்திரமும் இல்லையென்று அவர் சொல்லிவிட்டார். இதற்கடுத்து நான் வேறு சில படங்களில் நடிக்கும் வேலையாக இருந்தேன். அப்போது மணி ரத்னத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது .  நான் அவரை நேரில் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் என்னிடம்  என் மீசையை எடுக்கச் சொன்னார்.  நான் அதே இடத்தில் என்னுடைய மீசை எடுத்துக் காட்டினேன். இதைத் தொடர்ந்து இளமை கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று ஆனால் படத்தில் வயதான மாதிரியும் நடிக்க வேண்டும் என்பதால் அதற்கு  நான் பொருத்தமாக இருப்பேனா என்கிற குழப்பத்தில் இருந்ததாக சொன்னார் மணிரத்னம். பிறகு எனக்கு மேக் அப் எல்லாம் போட்டு பார்த்த பின் நான் கிளம்பிவிட்டேன். 


அடுத்த நாள் என்னை வரச்சொல்லி இருந்தார் மணிரத்னம். என்னிடம் நிறைய சிடி இன்னும் நிறைய தகவல்களைக் கொடுத்து இதுதான் நீ நடிக்க வேண்டிய கதாபாத்திரம் இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு என்று சொல்லிவிட்டார். நான் இரவு முழுவது தூங்காமல் படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்திருந்தேன். நான் அதை எல்லாம் படித்து படப்பிடிப்புக்குத் தயாரானேன். ” 


மோகன்லாலுக்கு நன்றி சொல்ல வேண்டும்


”என்னுடன் நடித்த மோகன்லாலுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு மட்டும் நான் 25 டேக் எடுத்துக்கொண்டேன் . மோகன்லால் பொறுமையாக இருந்து எனக்கு ஆதரவு கொடுத்தார். அதேபோல் நான் நடிக்கும்போது அந்த இடத்தில் நாசர், ரேவதி, மோகன்லால் , ஐஷ்வர்யா ராய் என எல்லாரும் இருந்தார்கள்.  என்னிடம் அதிக தாக்கம் செலுத்திய ஒரு நபர் என்றால் அது மணிரத்னம்தான். அவருடைய நேர்மையை நான் அவ்வளவு மதிக்கிறேன்” என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்