நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான "கோமாளி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ஒரு சூப்பர் டூப்பர் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படம் "லவ் டுடே". படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நேர்காணல் ஒன்றில் படத்தின் வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிரதீப்.
லவ் டுடே:
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் தயாரிப்பில் "லவ் டுடே" திரைப்படத்தை இயக்கி அப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, இவானா, சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.இந்த திரைப்படம் நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியானது. நவீன கால காதல், செல்போனால் காதலுக்குள் ஏற்படும் குழப்பங்கள் என சமகால பிரச்சனைகளை பேசி ரசிகர்களின் மனதை வென்றது லவ் டுடே. இந்த திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மாபெரும் வெற்றி பெற்ற லவ் டுடே !
படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே படத்தின் வசூல் களைகட்ட தொடங்கியது. படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பிரதீப்பிடம் படத்தின் வெற்றி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இவ்வளவு பெருசா வெற்றி பெறும்னு நான் எதிர்பார்க்கல என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும் ''ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. படத்தின் விளம்பர பணிகள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால், ஒன்று இரண்டு மார்னிங் ஷோ கிடைக்கும் என நினைத்தேன்...ஆனால் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் 5 மணி 7 மணி காட்சிகள் மற்றும் வார இறுதி நாட்களில் ஹவுஸ்புள் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.