பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜு நடித்துள்ள டியூட் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனின் போது பத்திர்கையாளரின் கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது
பிரதீப் ரங்கநாதன் கொடுத்த செம ரிப்ளை
நீங்க ஒரு ஹீரோ மெட்டிரியல் கிடையாது. ஆனால் இரண்டு படங்களில் உங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு கடின உழைப்பால் வந்ததா அல்லது அதிர்ஷ்டமா ? என பிரதீப் ரங்கநாதனிடம் டியூட் படத்தின் ப்ரோமோஷனின் போது பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. " நிச்சயமாக கடின உழைப்பு இருக்கிறது. எனக்கு கிடைக்கும் அன்பைப் பற்றி நான் கடந்த சில மாதங்களாக நிறைய யோசித்து வருகிறேன். என்னைவிட நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். என்னைப் பார்க்கும் போது ரசிகர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். நான் நடிக்கும்போதும் , சண்டைப்போடும் போதும் அவர்களே நடிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். என்னில் அவர்கள் தங்களை பார்க்கும்போதே நான் ஹீரோவாகி விடுகிறேன்." என அவர் கூறினார்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும் இயக்குநராகவும் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். கோமாளி படத்தைத் தொடர்ந்து பிரதிப் இயக்கி நடித்த லவ் டுடே மற்றும் இந்த ஆண்டு வெளியான டிராகன் ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து 100 கோடி வசூல் ஈட்டின. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எல்.ஐ.கே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்
டியூட் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார் . இந்த தீபாவளிக்கு மூன்று இளம் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. டியூட் படம் தவிர்த்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் . மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.