டிராகன்


கோமாளி , லவ் டுடே ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இளைஞர்கள் அதிகம் கவனிக்கும் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். டிராகன் படத்தைத் தொடர்ந்து சிம்பு படத்தை இயக்கவிருக்கிறார்.

Continues below advertisement


பிரதீப் ரங்கநாதன், கேஎஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. 


டிராகன் படத்தின் பட்ஜெட்


தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துடன் டிராகன் படம் வெளியாக இருக்கிறது. தற்போது இரு படங்களுக்கான ப்ரோமோஷன் வேலைகளும் நடந்து வருகின்றன. டிராகன் படத்திற்கான நேர்காணலின் போது படத்தின் பட்ஜெட் குறித்து அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார். 


" டிராகன் படத்திற்கு மொத்தம் 37 கோடி பட்ஜெட் சொல்லியிருந்தேன். நான் என்ன பட்ஜெட் சொன்னேனோ அதையே எடுத்து கொடுத்திருக்கிறேன். தேவையில்லாத ஒரு காட்சியைக் கூட நான் எடுக்கவில்லை. திரைக்கதையை எழுதும்போதே எடிட்டிங் முதல் எல்லாத்தையும் சேர்த்து எழுதிவிடுவேன். கூடுதலாக எடுப்பது எனக்கும் எனர்ஜி வேஸ்ட் தயாரிப்பாளருக்கு பணம் வேஸ்ட்" என கூறியுள்ளார்.


இரண்டு படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிகளை கொடுத்திருக்கிறார். லவ் டுடே படத்தில் தன்னை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். நடிகனாக இரண்டாவது படத்திலேயே அவர் படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் ஆச்சரியமளித்துள்ளது. 






டிராகன் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.