ஜெயம் ரவி, காஜல் அகர்வால் , சம்யுக்தா ஹெட்கே, யோகி பாபு, கே. எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமாகிய படம் கோமாளி. இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.


90s கிட்ஸ் vs 2k கிட்ஸ்


சமூக வலைதளங்களில் அதிகம் மோதிக்கொள்ளும் இரு தரப்புகள் என்றால் 90s கிட்ஸ் 2k கிட்ஸ் . எங்க தலைமுறையில் என்ன எல்லாம் இருந்தது தெரியுமா? என்று ஒருவர் சொல்ல, உங்க தலைமுறையில் இதெல்லாம் இருக்கா? என்று ஒருவர் கேட்க.. என இந்த சண்டை முடிவடையாமல்  நீண்டுகொண்டே இருக்கும். பேசாமல் எது பெருசுன்னு அடிச்சுக்காட்டு என்று வடிவேலு சொல்வதுபோல் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன்.


கோமாளி


90களில் பிறந்த ஒருவர் கோமாவில் கிடந்து 2000 ஆண்டில் கண் விழித்தால் என்ன ஆகும் என்று ஒரு கதை . 90-களில் பிறந்து ஜாலியாக ஓல்டு ஸ்கூல் முறையில் கடிதம் எழுதி காதலித்து வந்தவர் ரவி (ஜெயம் ரவி)  தனது காதலி நிகிதாவிடம் (சம்யுக்தா) காதலை சொல்லப் போகையில் ஏற்படும் விபத்தில் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். 10 ஆண்டுகள் கழித்து அவர் கண் விழிக்கும்போது அவரது உலகமே தலைகீழாக திரும்பிவிட்டதுபோல் ஆகிவிடுகிறது. எல்லாமே மாற்றமடைந்து விட்ட உலகத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல் போராடுகிறார் நாயகன்.


தனது காதலியை தேடிச்சென்றால் அவருக்கு திருமணம் ஆகிவிட்டிருப்பதை தெரிந்துகொள்கிறார். புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றால் அவருக்கென்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அப்படியான நிலையில் தனக்கென ஒரு அடையாளம் இருப்பதை தெரிந்துகொள்கிறார். தனது குடும்பத்தில் பாரம்பரிய சிலை ஒன்று ஒரு பிரபல ரவுடியிடம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். எப்படியாவது அதை மீட்க வேண்டும் என்று போராடுகிறார். 90-களின் இந்த ஹீரோ எல்லா காலத்திற்குமான ஹீரோவாக மாறுகிறாரா? இல்லையா? என்பதே மீதிக் கதை.


பிரதீப் ரங்கநாதன்


கமர்ஷியல் படங்களில் வெற்றிபெற வெகுஜனத்தில் ட்ரெண்டாக இருக்கும் ஒரு விஷயத்தை மிகச்சரியாக படமாக எடுத்துவிட்டால் அது எவ்வளவு பெரிய வெற்றியடையும் என்பதை செய்து காட்டினார் பிரதீப் ரங்கநாதன். தான் இயக்கிய குறும்படத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கிய பிரதீப், மிக குறைந்த முதலீட்டில் மிகப்பெரிய வசூலை தயாரிப்பாளருக்கு ஈட்டித் தந்தார்.


ஒரு முறை இல்லாமல் இரண்டாவது முறையாக இதே பேட்டர்னை ஃபாலோ செய்து லவ் டுடே படத்தை இயக்கி அதையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினார்.


90s கிட்ஸ் 2k கிட்ஸ் க்கு இடையிலான சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது