பிரபு தேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பஹிரா' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக களமிறங்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இதுவரை சிம்புவின் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் உள்பட இரண்டு படங்களை அவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள 'பஹிரா' படத்தில் இருந்து 'சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா' என்ற முதல் சிங்கள் பாடல் வரும் மே மாதம் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சைக்கோ த்ரில்லர் படமான பஹிராவில், பஹிரா முரளிதரன் என்ற கதாபாத்திரத்தில் மனநல காப்பகத்தில் இருக்கும் ஒரு நபரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் பிரபு தேவா. மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், அமைரா டஸ்ட்டர், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன் மற்றும் காயத்ரி சங்கர் என்று 6 கதாநாயகிகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 






பிரபுதேவாவும் தனது தந்தையை போல முதலில் குரூப் டான்சராகத்தான் திரையுலகில் அறிமுகமானார். 1986-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் என்ற படத்தில் வரும் பனிவிழும் மலர்வலம் என்ற பாடலில் தான் பிரபுதேவா குரூப் டான்சராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.




அதன் பிறகு 1994-ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான இந்து என்ற படத்தில் நாயகனாக களமிறங்கினர். அந்த படத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் பேசியது சீயான் விக்ரம் என்பது நினைவுகூரத்தக்கது. அதனை தொடர்ந்து சங்கரின் காதலன், ஆர். கண்ணனின் ராசையா, பி.வசுவின் லவ் போர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து ஹிட்டான நிலையில் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் என்று கலக்கிய பிரபுதேவா பாலிவுட் உலகிலும் பல படங்களில் நடித்தும் இயக்கியும் வருகின்றார். இறுதியாக தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் 2 மற்றும் தேவி 2 ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது பகீரா மற்றும் பொன் மாணிக்கவேல் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. பகீரா திரைப்படத்தின் முதல் சிங்கிள் சிரிக்கும் ரோஜா சைக்கோ ராஜா மே 6-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.