மெளன ராகம் படத்தில் வரும் பனிவிழும் இரவு பாடலில் கிருஷ்ணன் வேடமிட்டு ஒரே ஒரு காட்சியில் முதன்முதலாக தோன்றினார் பிரபுதேவா. இதனைத் தொடர்ந்து நடனக் கலைஞராக திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். கமலுக்குப் பிறகு தமிழ் திரைப்பட பாடல்களில் நடனத்தில் வெஸ்டர்ன் மற்றும் கிளாசிக்கல் நடனங்களை சேர்த்து புது ஸ்டைல் ஒன்றை உருவாக்கினார் பிரபுதேவா.


பிரபுதேவா


இந்து படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ச்சியான வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஷங்கர் இயக்கத்தில் காதலன் , ராஜீவ் மேனன் இயக்கத்தில் மின்சாரக் கனவு உள்ளிட்ட அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. மிஸ்டர் ரோமியோ, ஏழையின் சிரிப்பில் , வானத்தைப் போல , உள்ளம் கொள்ளை போகுதே என 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரபுதேவா. 


நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநராகவும் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். விஜய்யின் போக்கிரி , வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். தெலுங்கு இந்தியிலும் இந்தப் படங்களின் ரீமேக்களை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்திருக்கிறார். சமீப காலங்களில் மீண்டும் நடிப்பிறகு திரும்பியிருக்கும் பிரபுதேவா சினிமாவில் தனது இரண்டாவது ரவுண்டை தொடங்கியுள்ளார். 


சிங்காநல்லூர் சிக்னல்


பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பெரும்பாலும் காமெடி என்டர்டெயினர் படங்களே. தற்போது அவர் பிஹைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் மூன் வாக் படத்தில் நடித்து வருகிறார்.  யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ரஹ்மான் இசையமைக்க பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து பிரபுதேவா நடிக்க இருக்கும் படம் சிங்காநல்லூர் சிக்னல் 






ஜே.எம். ராஜா இயக்கும் இப்படத்தில் பிரபுதேவா டிராஃபிக் போலீஸாக நடிக்க இருக்கிறார். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கிறார்.  யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏ ஜே பிரபாகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.