காட்ஃபாதர் படத்தில் நடிகர் சிரஞ்சீவியும் சல்மான்கானும் இணைந்து நடனமாடும் பாடலை பிரபுதேவா இயக்குகிறார்.  


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் 'காட்பாதர்' படத்திற்காக அந்தப்படத்தின் நாயகன் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இணைந்து நடனமாடும் பாடலை 'நடனப்புயல்' பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்காக பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'காட்பாதர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் நன்றாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இதனை உருவாக்கியுள்ளனர். விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. 






இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போது '' அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நடன  வடிவமைப்பில், சிரஞ்சீவியும், சல்மான்கானும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள்.” என பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.  'காட்பாதர்' படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.