தெலுங்கு நடிகர் பிரபாஸ் தன்னுடைய விருந்தோம்பல் என்னும் நல்ல பழக்கத்திற்காகப் புகழ்பெற்றவர். தன்னுடைய திரைப்படங்களின் படப்பிடிப்புகளின் போது, தன் சக நடிகர்களுக்கு உள்ளூரில் புகழ்பெற்ற உணவு வகைகளை ஆர்வமுடன் வழங்குவது நடிகர் பிரபாஸின் வழக்கம். நடிகர் பிரபாஸ் விருந்து வைத்த பிரபலங்களின் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. 


பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வரும் நடிகர் பிரபாஸ், இயக்குநர் நாக் அஷ்வினின் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தின் பெயர் `ப்ராஜக்ட் கே’ என்று சூட்டப்பட்டுள்ளது. 


`ப்ராஜக்ட் கே’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள் சமீபத்தில் முதற்கட்டப் படப்பிடிப்புப் பணிகளை முடித்துள்ளனர். எனவே தன் சக நடிகர்களுக்குச் சுவையான உணவு விருந்து அளிக்கும் வழக்கம் கொண்ட நடிகர் பிரபாஸ், `ப்ராஜக்ட் கே’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்களுக்குச் சிறப்பு விருந்து ஒன்றைத் திட்டமிட்டு, அளித்துள்ளார். 



தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. அதில் ஆந்திரா, ஹைதராபாத் பகுதிகளின் பிரத்யேக அறுசுவை உணவுகள் இடம்பெற்றிருந்தன. `#IfYouKnowYouKnow’ என்று குறிப்பிட்டு, அதில் பல்வேறு வகையிலான உணவுகள் இருப்பதாக சொல்லாமல் சொல்லியிருந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை தீபிகா படுகோனே. 


தன் படப்பிடிப்பு முடிந்தவுடன் மும்பைக்கு விமானத்தில் பறந்து சென்ற நடிகை தீபிகா தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் வானில் இருந்து படம் ஒன்றை எடுத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், `ஹைதராபாத் அழகாக இருந்தது.. மீண்டும் சந்திப்போம்.. #ItsAWrap #Schedule1 #ProjectK @actorprabhas @nag_ashwin ’ என்று குறிப்பிட்டிருந்தார். 



`ப்ராஜக்ட் கே’ படத்தில் பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமிதாப் பச்சன் `ப்ராஜக்ட் கே’ படப்பிடிப்பு தொடங்கும் போது, அதன் முகூர்த்த படத்திற்குப் போஸ் கொடுத்தார். அதனைப் படம் பிடித்த நடிகர் பிரபாஸ் அதனைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, அமிதாப் பச்சனை `இந்திய சினிமாவின் குரு’ என்று வர்ணித்திருந்தார். 


இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் நாக் அஷ்வின், `இந்தக் கதாபாத்திரம் தீபிகா படுகோனே நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக யாரும் செய்யாத ஒன்றை தீபிகா செய்துள்ளார். அது அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமையும். தீபிகா - பிரபாஸ் ஜோடி இந்தப் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர்களுக்கு இடையிலான கதை என்பது இன்னும் பல ஆண்டுகளுக்குப் பார்வையாளர்களின் மனதில் இடம்பெறும்’ எனக் கூறியுள்ளார்.