சலார் படத்தில் நடித்து வரும் பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர் தோல்விப் படங்கள்
தெலுங்கு சினிமா, தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவின் கடைக்கோடி வரை பாகுபலியாக ரசிகர்களைக் கவர்ந்த பிரபாஸ் ‘பான் இந்தியா’ ஸ்டாராக உருவெடுத்த நிலையில், ’சாஹோ’, ’ராதே ஷ்யாம்’ என அடுத்தடுத்து ஹை பட்ஜெட் தோல்விப் படங்களை வழங்கி தன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் சுழலில், அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பெருமளவும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபாஸின் அடுத்த படம்
’ஈ ரோஜுலு’, ’பலே பலே மகடிவாய்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய தெலுங்கு சினிமா இயக்குநர் மாருதியுடன் தன் அடுத்த படத்தில் பிரபாஸ் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இப்படத்தை RRR பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிப்பதாகக் கூறப்படும் நிலையில், அமானுஷ்யம் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவல் குறித்து முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மாருதி, ”இது மிகப்பெரும் படம், பிரபாஸ் மூன்று பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி வருகிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும், இந்த வாரம் படத்துக்கான பூஜை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
Boycott சொல்லும் ரசிகர்கள்
இந்நிலையில் முன்னதாக இயக்குநர் மாருதியின் படத்தை புறக்கணிக்கும்படியும், பிரபாஸ் ஏற்கெனவே தோல்விப் படங்களை வரிசையாக வழங்கி வருகிறார் என்றும் அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தவிர, நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் ப்ராஜக்ட் கே படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.