வரவர படங்களின் பட்ஜெட் ஆத்தி என்ற வாய் பிளக்க வைக்கச் செய்கின்றன. பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என்ற டேக்லைனை எல்லாம் கடந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிப் படங்களுமே பட்ஜெட்டில் பிரம்மாண்டம் காட்டத் தொடங்கிவிட்டன. இவற்றில், லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறது பிரபாஸின் படம் ஒன்று. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு மட்டுமே ரூ.75 கோடி செலவழித்துள்ளனர் என்பதுதான் இதன் ஹைலைட்.


பிரபாஸ் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கூட அவர் இன்றும் பாகுபலியாக தான் மக்களில் மனங்களில் ஜொலிக்கிறார். பாகுபலி 1, பாகுபலி 2 என இரண்டு பாகங்களில் நடிகர்கள் பட்டாளமே இருந்தாலும் கூட பிரபாஸ் தான் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கிறார். இயக்குநர் ராஜமெளிலியின் இயக்கத்தில் பாகுவாகவே வாழ்ந்த பிரபாஸ் தற்போது ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடிக்கக் கமிட் ஆகியுள்ளார். 


படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாகியுள்ள நிலையில், சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர் ஒன்று வெளியானது. 






க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு ரூ.75 கோடி செலவிடப்படுகிறது என்ற தகவல் வெளியான நிலையில். இது குறித்து படக்குழுத் தரப்பில் விசாரித்தால், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சற்றே தூக்கலாக இருக்கிறது என்றனர். அதுவும் அக்கடா, துக்கடா ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையாம். வாய்பிளக்க வைக்கும் காட்சிகளாம். அதனாலேயே கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 75 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கென டேங்குகள், விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


சலார் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகவுள்ளது. மேலும், பிரபாஸ் தற்போது தேசமே அறிந்த பேன் இந்தியா ஸ்டாராகிவிட்டதால் பிரபாஸின் இந்தப் படம் தமிழ், இந்தி, மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


சலார் படம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளார். படத்தில் ஜெகபதி பாபு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிசையில் பிரபாஸ் பூஜா ஹெக்டேவுடன் அவர் நடித்துள்ள காதல் படமாக ராதே ஷ்யாம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது.