கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தின் ஷூட்டிங் தளத்தில் பிரபாஸ் அசைவ உணவு உண்பதாகக் கூறி வித்தியாசமான வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


கல்கி 2898 AD


பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்திய நடிகராக உருவெடுத்த பிரபாஸ், தற்போது நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898. கடவுள் கிருஷ்ணரின் 10ஆவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக இப்படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.


டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தினை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இப்படத்தில் நீண்ட காலத்துக்குப் பின் களமிறங்குவது ஏற்கெனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளறியுள்ளது.


கிளம்பிய எதிர்ப்பு!


தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


என்ன தான் பிரபாஸின் பான் இந்திய படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவி வந்தாலும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் கைகோர்த்துள்ள நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியபடியே உள்ளன.


இறுதியாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ், சலார் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்தப் படத்தின் வெற்றியை எதிர்நோக்கி பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இத்தகைய சூழலில் கல்கி படத்தில் நடிக்கும் பிரபாஸூக்கு புதுவிதமான எதிர்ப்பு ஒன்று கிளம்பியுள்ளது.


அதாவது, கல்கி படத்தின் படப்பிடிப்பில், நடிகர் பிரபாஸ் தினந்தோறும் அசைவம் சாப்பிடுவதாகவும், கடவுள் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தில் நடிக்கும் பிரபாஸ் இப்படி அசைவம் சாப்பிடுவது தவறு என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னதாக அதிபுருஷ் திரைப்படத்தில் ராமராக நடித்தபோதும் பிரபாஸ் இவ்வாறுதான் செய்ததாகவும் கூறி பிரபல பாலிவுட் விமர்சகர் கேஆர்கே தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 






இந்நிலையில் உணவு அவரது தனிப்பட்ட உரிமை என்றும், தீவிர அசைவ உணவு பிரியரான பிரபாஸை இப்படிக் கூறுவது தவறு என்றும் ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் இப்பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும் இணையத்தில் களமாடி வருகின்றனர். ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் சைஃப் அலி கான் இராவணனாக நடித்தபோதும் இதேபோன்ற சர்ச்சைக் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.