UGC NET 2024 Exam Dates: ஜுன் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (UGC-NET) 2024 ஜூன் அமர்வு மற்றும் பிற தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
யுஜிசி நெட் 2024 புதிய தேர்வு தேதி
வினாத்தாள் கசிவு போன்ற காரணங்களால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி-நெட்) 2024 ஜூன் அமர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சமீபத்திய அறிவிப்பின்படி, NCET 2024 தேர்வு ஜூலை 10ஆம் தேதியும், கூட்டு CSIR UGC NET ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் நடத்தப்படும். UGC NET ஜூன் 2024 அமர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய தேதிகள் மற்றும் தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும் வகையில், "வரவிருக்கும் தேர்வுகளுக்கான NTA தேர்வு காலண்டர்" என்ற தலைப்பில் NTA அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்பட்ட UGC NET ஜூன் 2024 தேர்வுகள், தற்போது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) வடிவத்திற்கு மாற்றம் காண உள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
இந்த மாத தொடக்கத்தில், ஜூன் 18 அன்று நடந்த UGC-NET தேர்வு கேள்வித்தாள் கசிந்ததாக வெளியான செய்திகள் வெளியானதை அடுத்து, நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்வதாக கல்வி அமைச்சகம் தூண்டியது. இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்த போது, தேர்வின் நேர்மை குறித்த கவலைகளை காரணம் காட்டி, கசிந்த தாள் அசலுக்கு பொருந்துகிறதா என்பதை சரிபார்த்தவுடன், தேர்வை ரத்து செய்யும் முடிவு விரைந்து எடுக்கப்பட்டதாக தெளிவுபடுத்தினார். அதாவது "UGC-NET வினாத்தாள் டார்க்நெட்டில் கண்டுபிடிக்கப்பட்டது, அசல் வினாத்தாளை போன்றே கசிந்த வினாத்தாளும் உள்ளது" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இச்சம்பவம் குறித்த கவலைகளை வெளிப்படுத்திய அமைச்சர், தேர்வு தாள் கசிவுகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார். கூடுதல் புதிய தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு, தேர்வாளர்கள் அதிகாரப்பூர்வ தேசிய தேர்வு முகமை இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரமும் பூதாகரமாய் வெடித்துள்ளது. இதுதொடர்பாக பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.