கல்கி 2898 AD


பிரபாஸ்  நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் ,  தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி , பசுபதி  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. 


அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலை


கல்கி படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் படக்குழு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்திற்கான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளார்கள் . இதற்கு தெலங்கானா அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது. படம் வெளியான முதல் எட்டு நாட்களுக்கு ஒரு டிக்கெட்டிற்கு 70 முதல் 100 ரூபாய் வரை அதிகம் வசூலிக்கப் படும். மேலும் அதிகாலை 5 : 30 மணிக்கு சிறப்பு திரையிடல்களும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 


முதல் நாள் வசூல்


கல்கி படம் முதல் நாளில் உலகளவில் எவ்வளவு வசூல் ஈட்டும் என்று சாக்னிக் தளம் தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் முன்பதிவுகளின் அடிப்படையில் கணக்கிடப் பட்டவை. அதன்படி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் கல்கி 90 முதல் 100 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கலாம். தெலுங்கு தவிர்த்து இந்தியில் பிரபாஸ்சின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


கடந்த முறை சலார் படத்திற்கு இருந்ததைக் காட்டிலும் கல்கி படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல் நாளில் வட மாநிலங்களில் 20 கோடி வரை படம் வசூலிக்கலாம். அதே நேரம் தமிழ்நாடு , கர்னாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இப்படம் 15 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கலாம். 


வெளிநாடுகளைப் பொறுத்தவரை முதல் நாளில் 60 முதல் 70 கோடி வரை இப்படம் வசூல் ஈட்டும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் நாளில் கல்கி படம் இந்தியாவில் 120 முதல் 140 கோடியும் வெளிநாடுகளில் 60 முதல் 70 கோடியும் வசூல் செய்து உலகளவில் 180 முதல் 210 கோடி வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 






முறியடிக்குமா ஆர் ஆர் ஆர் படத்தின் வசூலை ?


முதல் நாளில் உலகளவில் அதிக வசூல் எடுத்த இந்தியப் படங்களில்  ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் முதலிடத்திலும். பாகுபலி 2 இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள கல்கி இந்த வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.