தனது கல்யாணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு பிரபல நடிகர் பிரபாஸ் சூப்பரான பதில் ஒன்றை அளித்துள்ளார்.


ஓம் ராவத் இயக்கியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படமானது ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயிப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 


முன்னதாக கடந்த ஆண்டு ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி கடும் கேலிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக மேலும் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் வெளியீடும் தள்ளிச் சென்றது. இதனைத் தொடர்ந்து ஆதி புருஷ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.


சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஆதிபுருஷ், மீண்டும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.  படத்தின் கிராபிக்ஸ் சாதாரண வீடியோ கேமில்  வருவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இப்படியான நிலையில், திருப்பதியில் நடந்த ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


அப்போது பிரபாஸ் மேடைக்கு ஏறியதும் அவரது ரசிகர்கள் பெல்லி, பெல்லி என்று கூச்சலிட்டனர். பெல்லி என்பது தெலுங்கில் திருமணம் என்பதை குறிப்பதாகும். 43 வயதான பிரபாஸ் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. சக நடிகைகளுடன் கிசுகிசுக்கள் எழுந்தாலும் அவருக்கான வாழ்க்கைத் துணை இன்னும் அமையாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் பிரபாஸிடம் திருமண அப்டேட் கேட்டனர். 


அதற்கு, “என்ன? திருமணமா? அது நடந்தால் திருப்பதியில் திருமணம் செய்து கொள்வேன்” என பதிலளித்தார். தொடர்ந்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரபாஸ், “‘எனது திருமணத்தைப் பற்றி ரசிகர்கள் கேட்கும்போது நான் எரிச்சலடையவில்லை. காரணம் இது என் மீதான அன்புக்குரிய இடத்தில் இருந்து வரும் கவலைக்குரிய ஒன்றாகவே நான் புரிந்துகொள்கிறேன். இது மிகவும் சாதாரண கேள்வி. நான் அவர்களின் நிலையில் இருந்தால், நானும் கவலைப்படுவேன்’ என தெரிவித்துள்ளார். 


இதற்கிடையில் ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஒரு இருக்கை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்போவதாக  பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்குவதால் அனுமனுக்கு செய்யும் மரியாதையுடன் கூடிய அஞ்சலி என தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம்  தெரிவித்துள்ளது.