பாகுபலி எவ்வளவு பிரம்மாண்டமோ அதே அளவு பிரம்மாண்டம் அதில் நடித்த பிரபாஸுடனும் ஒட்டிக் கொண்டது. ஓட்டு மொத்த இந்திய சினிமாவினைத் திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படம்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியினைக்கண்டது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியான நிலையில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத இப்படத்தில், ரம்யாகிருஷ்ணன், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இவர்களது தனித்துவத்துவமான நடிப்பில் மிகப்பெரிய வெற்றியினைக்கண்ட பாகுபலி 3 ஆம் பாகம் வெப் தொடராக வெளியாகவிருக்கிறது. Bahubali before the beginning என்ற பெயரில் இத்திரைப்படம் வெப் தொடராக வெளிவரவுள்ளது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையினை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்படவுள்ளது. பாகுபலி முதல் பாகத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய பெருமையைப் பெற்று வைத்துள்ள பாகுபலியின் நாயகனான பிரபாஸ் இப்போதெல்லாம் தான் நடிக்கும் படங்கள் அனைத்தையுமே மல்டி லிங்குவலாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். தன்னை ஒரு பான் இந்தியா நட்சத்திரமாகவே அவர் தரம் உயர்த்திக் கொண்டு வருகிறார். மேலும், தன்னை உலக சினிமா நோக்கி இழுத்துச் சென்ற பெருமை முழுக்க பாகுபலிக்கே சேரும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், என் சினிமா வாழ்க்கையின் கேம் சேஞ்சிங் ப்ராஜக்ட் என்றால் அது எப்போதுமே பாகுபலி தான். அது எனக்கு ஒரு மகிழ்ச்சி தரும் ப்ராஜக்ட். நான் எங்கு சென்றாலும் என்னை ரசிகர்கள் பாகுபலியாகத் தான் பார்க்கின்றனர். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் எல்லாமே பாகுபலியால் தான் கிடைக்கிறது. நான் இன்னும் வளர்ந்தாலும் அதற்கும் பாகுபலி தான் காரணமாக இருக்கும் என்றார்.
கலவையான விமர்சனம் பெற்ற ராதே ஷ்யாம்:
ராதா கிருஷ்ணா குமார் இயக்கிய காதல் கதை ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணர் விக்ரமாதித்யாவாகவும், பூஜா ஹெக்டே டாக்டர் பிரேரனாவாகவும் நடித்துள்ளனர். ராதே ஷ்யாம் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் இறுதியாக கடந்த மார்ச் 11ஆம் தேதி திரைக்கு வந்தது. திரையரங்குகளில் குவிந்த பிரபாஸின் ரசிகர்கள், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே கட்-அவுட்கள் அமைத்து அந்த தினத்தை கொண்டாடினார்கள். ஆனால் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்தப் படத்தை அடுத்து பிரபாஸ் கையில் ஆதிபுருஷ் என்ற புராண படம், ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி கட்டும் சலார், ப்ராஜக்ட் கே, ஸ்பிரிட் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.