கல்கி 2898


 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் கல்கி 2898. இப்படத்தில் அமிதாப் பச்சன் , தீபிகா படுகோன் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளார்கள். வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ்  நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் ஜூன் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 


கல்கி டிரைலர் ரிலீஸ் தேதி


இந்த ஆண்டு வெளியாக இருக்கும் மிகப்பெரிய பஜெட்டில் உருவாகி இருக்கும் படம் கல்கி 2898. இப்படத்தின் வெற்றி பிரபாஸின் திரைப் பயணத்தை பெரியளவில் தீர்மானிக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கருதுகிறார்கள். பிரபாஸ் நடிப்பில் முன்னதாக வெளியான ஆதிபுருஷ் படம் சுமார் 500 கோடி செலவிட்டு எடுக்கப் பட்டு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து வெளியான சலார் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது ஒட்டுமொத்த பிரபாஸ் ரசிகர்களின் கவனமும் இந்தப் படத்தில் குவிந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த வகையிலும் குறையவிடாமல் படக்குழு அவர்களுக்கு அடுத்த அடுத்த அப்டேட்களை கொடுத்து வருகிறது. 






சமீபத்தில் ஹைதராபாதில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இப்படத்தைப் பற்றிய க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது படக்குழு. இந்த வீடியோவில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. எந்த வித சலிப்பும் இல்லாமல் ரசிகர்கள் திரையில் பார்த்து பிரமிக்கும் வகையிலான ஒரு படமாக கல்கி இருக்கும் என்கிற உத்தரவாதத்தை படக்குழு அளித்து வருகிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்திருப்பது ஒரு கவனத்தை ஈர்க்கக் கூடிய அம்சமாக இருந்து வருகிறது. இது வரை படத்தில் கமல்ஹாசனின் தோற்றம் அல்லது கதாபாத்திரல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இப்படியான நிலையில் கல்கி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது படக்குழு.


வரும் ஜூன் 10 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். இதே ஜூன் மாதத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரே நேரத்தில் கமல் நடித்த இரு பிரம்மாண்டமான படங்களின் டிரைலர் கமல் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கப் போவது உறுதி.